புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு - இரவில் கருடசேவை நடக்கிறது
- வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
- இதே போல் நெல்லை வீரராகவ பெருமாள் கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சாந்திகள் நடைபெற்றது.
நெல்லை:
புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு இன்று நெல்லை மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் அதிகாலை முதல் நடைபெற்றது.
பக்தர்கள் தரிசனம்
திருவேங்கடநாதபுரத்தில் அமைந்துள்ள தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்க ப்படும் வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதே போல் நெல்லை வீரராகவ பெருமாள் கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சாந்திகள் நடைபெற்றது. தொடர்ந்து நவகலச கும்பங்கள் வைத்து ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் உற்சவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜருக்கு மாபொடி, மஞ்சள்பொடி, வாசனைபொடி, பால், தயிா், பஞ்சாமிர்தம், தேன், இளநீா், சந்தணம் என பலவகை பொருள்களால் திருமஞ்சனம் நடைபெற்றது.
கருடசேவை
தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரத ராஜருக்கு அா்ச்சனை நடைபெற்று நட்சத்திர ஆரத்தி, கும்பஆரத்தி, தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டு சோடச உபசரனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் திருமஞ்சன நிகழ்வில் கலந்து கொண்டு பெருமாளை தாிசனம் செய்த னா். இரவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகின்றது.
இதேபோல் பாளை ராஜ கோபால சுவாமி கோவில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். டவுன் மேல மாடவீதியில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் காலை 8.30 மணிக்கு திருமஞ்சனம், 10.30 மணிக்கு திருவாராதனம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு துளசி, துளசி தீர்த்தம், மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், காட்டுராமர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து பெருமாள் கோவில்களில் இன்று இரவில் கருடசேவை நடக்கிறது.