உள்ளூர் செய்திகள்

நர்சிங் கல்லூரியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

ஆலங்குளம் அருகே தனியார் நர்சிங் கல்லூரியை பெற்றோருடன் மாணவர்கள் முற்றுகை

Published On 2023-11-08 08:27 GMT   |   Update On 2023-11-08 08:27 GMT
  • விடுதியில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருக்கிறது என மாணவர்கள் புகார் கூறி வந்தனர்.
  • மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரி நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள புதூரில் கேரள மாநிலத்தை சேர்ந்த தம்பி என்பவர் நர்சிங், பாலிடெக்னிக் கல்லூரிகள் நடத்தி வருகிறார். இங்கு பயிலும் சுமார் 500 மாணவ-மாணவிகளில் 400-க்கும் மேற்பட்டோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு ஆலங்குளம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருக்கிறது. நர்சிங் கல்லூரிக்கும் அவர்கள் தங்கும் விடுதிக்கும் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு உள்ளதால் செல்வதற்கு சிரமமாக இருப்பதாகவும் மாணவர்கள் புகார் கூறி வந்தனர்.

மேலும் பெண்கள் விடுதி காப்பாளர் இரவு நேரத்தில் பெண்களை போட்டோ எடுத்து ஆண் விடுதி காப்பாளருக்கு அனுப்புகின்றனர் என்றும் அவர்கள் புகார் கூறிவந்த நிலையில், நேற்று மாணவ, மாணவிகள் அவர்களுடைய பெற்றோருடன் இணைந்து ஆலங்குளத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரி நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர்.

தகவல் அறிந்த ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்ணபாஸ் மற்றும் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இப்போராட்டத்தை தொடர்ந்து நர்சிங் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News