உள்ளூர் செய்திகள்

கோவை பன்னிமடை பகுதியில் சாலையை சீரமைக்க கோரி மாணவர்கள்- பெற்றோர் மறியல்

Published On 2023-03-10 09:44 GMT   |   Update On 2023-03-10 09:44 GMT
  • மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்திருந்தனர்
  • ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கவுண்டம்பாளையம்,

கோவை துடியலூரில் இருந்து பன்னிமடை வழியாக வரப்பாளையம் செல்லும் சாலையில் அத்திக்கடவு குடிநீர் குழாய் பதிப்பதற்கான பணிகள் நடைபெற்றன. அப்பணிகள் முடிவடைந்து நீண்ட நாட்கள் ஆகியும் சாலை பணிகள் முடிவடையாமல் உள்ளது. இதன் காரணமாக மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி சேரும் சகதியும் ஆகி, குண்டும் குழியுமாக உள்ளன.

இதனால் இந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. மேலும் இந்த பகுதியில் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்டவைகள் உள்ளன. பள்ளி, கல்லூரி வாகனங்களும் இந்த வழியாக சென்று வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்திருந்தனர். இருந்தும் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தநிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் திடீரென்று பன்னிமடையில் இருந்து வரப்பாளையம் செல்லும் சாலையை வழிமறித்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக சென்ற அனைத்து பள்ளி கல்லூரி வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் நின்றன. இதனால் போக்குவரத்து கடும் போக்குவரத்து ஏற்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் பி.டி.ஒ செந்தில்குமார், மண்டல அலுவலர் ஜோதி, பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், தடாகம் கப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நாயனார் மற்றும் போலீசார் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்கள் உடனடியாக சாலை போடுவதற்கான நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Tags:    

Similar News