விளையாட்டுப்போட்டிகளில் ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் : கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை
- விளையாட்டுப்போட்டிகளில் ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் : கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார்.
- போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட வணிகர் சங்கத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி சேலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி மாணவர்களுக்கான 44-வது பைட் செஸ் ஒலிம்பியாட் 2022 சதுரங்க போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் கற்பித்தலோடு, மாணவர்களின் அறிவுத்திறனையும் மற்றும் தனித் திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் விதமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவியர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். கல்வி கற்பதோடு, இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, அறிவுத் திறனையும், உடற்வலிமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்போட்டியில் பங்கேற்றுள்ள 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்குஎனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாப்பிள்ளை, மாவட்ட உடற்கல்வி இயக்குநர் பாலாஜி, கள்ளக்குறிச்சி மாவட்ட சதுரங்க கழக தலைவர் பழனி, செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ஆழ்வார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட வணிகர் சங்கத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.