உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் திடீர் உடைப்பு

Published On 2024-05-07 06:12 GMT   |   Update On 2024-05-07 06:12 GMT
  • மார்த்தாண்டம் மேம்பாலம் தமிழகத்தில் முதல் இரும்புப்பாலமாகும்.
  • பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. பம்மம் பகுதியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மார்த்தாண்டம் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.222 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் மேம்பாலம் தமிழகத்தில் முதல் இரும்புப்பாலமாகும். இந்த மேம்பாலத்தில் 112 ராட்சத பில்லர்கள் (தூண்கள்) அமைக்கப்பட்டது.

இதில் 21 தூண்கள் கான்கிரீட்டால் ஆனவை. மற்ற தூண்கள் அனைத்தும் இரும்பால் ஆனவை. இந்த பாலம் திறக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது முதல் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடி குறைய தொடங்கியது. பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை அதிக பாரம் ஏற்றிச்சென்ற கனரக லாரிகள் வரிசையாக பாலத்தில் நின்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலம் தொடங்குகின்ற பம்மம் பகுதியில் 100 மீட்டர் தொலைவில் சாலையின் மையப்பகுதியில் 2 மீட்டர் விட்டத்தில் சிமெண்ட் கலவை உடைந்து விழுந்தது. ஆனால் சாலையின் தூண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தற்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்கமாக செல்கின்ற போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பஸ்கள் அனைத்தும் பாலத்தின் கீழ்பகுதி வழியாக இயக்கப்பட்டது. இதனால் மார்த்தாண்டத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது பற்றிய தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டனர்.

அதனை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் என்னென்ன நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மார்த்தாண்டம் பாலம் கட்டிய பிறகு சரியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வில்லை. பாலத்தின் மேல் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சியளித்தது.

சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நேரங்களில் தண்ணீரும் தேங்கி நின்றது. தற்போது கனரக வாகனங்களில் அதிக எடையில் கனிம வளங்கள் பாலத்தின் வழியாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. நேற்று இரவும் கனிம வள வாகனங்கள் அணிவகுத்து நின்றதே பாலம் சேதம் அடைவதற்கு காரணம் என குற்றம் சாட்டினர்.

Tags:    

Similar News