கோத்தகிரி அருகே திடீர் நிலச்சரிவு: பாறைகள் உருண்டு சாலையை மூடியது
- மண் மற்றும் பாறைகள் சரிந்து கோத்தகிரி-மசக்கல் சாலையில் வந்து விழுந்தது.
- அதிகாரிகள் விரைந்து வந்து மண் மற்றும் பாறாங்கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அரவேணு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. தற்போது மழை குறைந்து கடும் குளிரும், பனி மூட்டமும் நிலவி வருகிறது. கடும் குளிரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கோத்தகிரியில் இருந்து மசக்கல் செல்லும் சாலையில் உயிலட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவர்.
இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் மக்கள் மலை காய்கறி பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். கேரட், முட்டைக்கோஸ், மேரக்காய் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மண் மற்றும் பாறைகள் சரிந்து கோத்தகிரி-மசக்கல் சாலையில் வந்து விழுந்தது. இதனால் அந்த சாலை முழுவதும் மண்ணும், பாறாங்கற்களுமாக காட்சியளித்தது. மேலும் அந்த சாலையே தெரியாத அளவுக்கு மண் மூடி காணப்பட்டது.
இன்று காலை அந்த வழியாக வந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து மண் மற்றும் பாறாங்கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டு, அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலை வழியாக தான் ஏராளமான கிராமங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் இந்த சாலையில் கல்லூரி மற்றும் விவசாய நிலங்களும் அதிகளவில் உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாதது பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.