கோடை விடுமுறை: ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
- சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் முறை அறிமுகம்.
- பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
ராமேஸ்வரம்:
தமிழகம் முழுவதும் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள், ஆன்மீக தலங்கள், கோடை வாசஸ்தலங்கள் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் சென்று வர தொடங்கி உள்ளனர்.
கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்ப்பதற்காக அங்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மாநிலம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சுருளி, கும்பக் கரை, குற்றாலம் போன்ற அருவிகள் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை காரணமாக காட்டாறு வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கும், குளிப்பதற்கும் தற்காலி கமாக தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இது போன்ற பகுதிகளை தவிர்த்துவிட்டு ஆன்மீக தலங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர்.
இதையடுத்து ராமேசுவரத்திற்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ராமேசுவரத்தில் குவிந்து உள்ள பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அக்னி தீர்த்த கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திற்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கனக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இன்று அதிகாலையில் வருகை தந்தனர்.
அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடினர். இதன் பின்னர் ராமநாத சுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர். இதன் பின்னர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
இதனைதொடர்ந்து, தனுஸ்கோடி, அரிச்சல் முனை, கோதரண்டராமர் கோவில், ராமர்பாதம் மற்றும் முன்னாள் குடியர வை தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்து செல்பி எடுத்துக் கொண்டனர்.
பக்தர்கள் அதிகளவில் வருகையை முன்னிட்டு காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் உமாதேவி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.