கோத்தகிரியில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்
- மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக வசீகரிக்கிறது
- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
அரவேணு,
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்நாட்டு, வெளிநாட்டு தாவரங்கள் வளர தேவையான காலநிலை நிலவுகிறது. மேலும் இங்கு ஆங்கிலேயர் காலத்தில் நிலச்சரிவை தடுக்கும் வகையில் காட்டு சூரிய காந்தி விதைகள் தூவப்பட்டன.
இவை தற்போது மண்ணின் உறுதி தன்மையை அதிகரித்து உள்ளன. மேலும் நிலச்சரிவையும் கட்டுப்படுத்தி வருகிறது. கோத்தகிரியில் வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் காட்டு சூரிய காந்தி மலர்கள் பூக்க தொடங்கும். அதன்படி இவை தற்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலும், அரவேனு முதல் குஞ்சப்பனை வரையிலும் சாலையோரங்களில் மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக பூத்துக்குலுங்குகின்றன.
வாசம் இல்லாத மலராக இருந்தபோதிலுலும் அவை தற்போது காண்போரின் கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் மலர்ந்து நிற்கின்றன. எனவே அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் காட்டு சூரியகாந்தி மலர்கள் பூத்துக்குலுங்குவதை ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சியை பரிமாறி வருகின்றனர்.