அரோகரா கோஷம் முழங்க மயிலம் முருகர் கோவிலில் சூரசம்ஹார விழா
- கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மயில் வடிவிலான மலையில் அமைந்தபடி முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. முக்கிய விழாவான சூரசம்கார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து மாலை 7 மணி அளவில் ஸ்ரீ பால சித்தர் சன்னதியில் ஆறுமுக கடவுள் வேல் வாங்கி சூரனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட கலெக்டர் பழனி, மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா, மயிலம் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், மத்திய ஒன்றிய செயலாளர், செழியன், மாவட்ட பொருளாளர் ரவி, விவசாய அணி துணை தலைவர் நெடி சுப்பரமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மயிலம் பொம்மபுர ஆதினம் 20 ஆம் சிவஞான பாலசுவாமிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.