சேலம் மாவட்டத்தில் அறுவடை தொடங்கியதால் புளி விலை வீழ்ச்சி
- ஓராண்டுக்கு சமையலுக்கு தேவையான அளவிற்கு புளியை கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொள்வதில் பொதுமக்கள் மட்டுமின்றி உணவகம், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களும் மளிகை வியாபாரிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- 1கிலோ முதல் தர புளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சேலம்:
வாழப்பாடி அருகே அருநுாற்றுமலை, ஜம்பூத்துமலை, நெய்யமலை, சந்துமலை கிராமங்கள் மற்றும் தருமபுரி மாவட்ட எல்லையில் சித்தேரி மலை, தீர்த்தமலை பகுதிகளிலும் 200க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சரிவான நிலப்பகுதிகள், தரிசு நிலங்களில், பாரம்பரிய முறையில் நீண்டகால பலன் தரும் புளியமரங்களை வளர்த்து பராமரித்து வருகின்றனர். சாலையோரங்களிலும், வனப்பகுதிகளிலும் புளிய மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இதுமட்டுமின்றி, சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர் பகுதி கிராமங்களிலும், தரிசு நிலங்களிலும், பாரம்பரிய முறையிலும், குறைந்த நாட்களில் கூடுதல் மகசூல் கொடுக்கும், சதைப்பற்று மிகுந்த ஒட்டுரக புளி மரங்களையும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
மலை கிராமங்களுக்கு செல்லும் வாழப்பாடி பகுதி வியாபாரிகள், விவசாயிகளிடம் புளியம் பழத்தை மேலோடுகளுடன் கொள்முதல் செய்து கொண்டு வந்து, கூலித்தொழிலாளர்களை கொண்டு ஓடு மற்றும் விதையை நீக்கி பதப்படுத்தி விற்பனை செய்கின்றனர். விவசாயிகளே நேரடியாகவும் விற்பனை செய்கின்றனர்.
சேலம் மாவட்ட எல்லையிலுள்ள மலை கிராமங்களில் விளையும் புளி சமையலுக்கு ஏற்ப இனிப்பு கலந்த புளிப்புச்சுவையுடன் இருப்பதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்களும், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களும் விரும்பி வாங்கி, அன்றாடம் உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு புளி அறுவடை தொடங்கியுள்ளது. மரத்தில் இருந்து புளியம் பழங்களை உதிர்த்து அறுவடை செய்து, மேலோடு மற்றும் விதையை நீக்கி விற்பனை செய்வதில் விவசாயிகளும், வியாபாரிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். விற்பனைக்கு வரத்து அதிகரித்துள்ளதால் புளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
1கிலோ முதல் தர புளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஓராண்டுக்கு சமையலுக்கு தேவையான அளவிற்கு புளியை கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொள்வதில் பொதுமக்கள் மட்டுமின்றி உணவகம், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களும் மளிகை வியாபாரிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மே மாத இறுதியில் அறுவடை முடிவுக்கு வரும் என்பதால், தொடர்ந்து இரு மாதங்களுக்கு புளி விலையில் பெரியளவில் மாற்றம் இருக்காது என வியாபாரிகள் தெரிவித்தனர்.