தாம்பரம் ரவுடி கொலையில் திண்டிவனம் கோர்ட்டில் 7 பேர் சரண்
- போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.
- வழக்கு விசாரணைக்கு ஆஜராக லோகேஷ் வந்த போதுதான் மர்மகும்பல் வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்து உள்ளது.
செங்கல்பட்டு:
தாம்பரம் அடுத்த இரும்புலியூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (வயது32). ரவுடி. நேற்று காலை இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராக வந்தார். அப்போது லோகேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் கோர்ட்டு அருகே உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் திடீரென நாட்டு வெடி குண்டை டீக்கடையில் வீசினர். இதில் டீக்கடை ஒட்டி இருந்த சுற்றுச்சுவரில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லோகேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர். கோர்ட்டு அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ரவுடி லோகேசை மீட்டு செங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக இறந்தார். போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. லோகேசின் அண்ணன் ஏற்கனவே கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலைக்கு பழி தீர்க்க ஒருவரை கடந்த 2018-ம் ஆண்டு லோகேஷ் தீர்த்துக்கட்டி உள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக லோகேஷ் வந்த போதுதான் மர்மகும்பல் வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்து உள்ளது.
எனவே பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி. பரத் மேற் பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் லோகேஷ் கொலையில் தேடப்பட்ட விக்கி என்கிற விக்னேஷ் உள்பட 7 பேர் இன்று காலை திண்டிவனம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதன் பின்னரே கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வரும்.