உள்ளூர் செய்திகள்

தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு 1,550 நாட்களாக பதில் அளிக்காததால் தாசில்தாருக்கு அபராதம்

Published On 2024-05-28 07:34 GMT   |   Update On 2024-05-28 07:34 GMT
  • என்.ஜி.மோகன், சென்னையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்.
  • வழக்கை விசாரித்த ஆணையம் பதில் அளிக்காமல் அலைக்கழித்ததை உறுதி செய்தது.

மதுரை:

மதுரை மாவட்டம் சத்ய சாய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் போக்குவரத்து துறை ஊழியர் என்.ஜி.மோகன். இவர் தேனி மாவட்டம் போடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட மேல சொக்கநாதபுரம் கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பல்வேறு கேள்விகளை முன்வைத்து கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணப்பம் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த நிலையில் சுமார் 1,550 நாட்களைக் கடந்த போதிலும், தாசில்தார் அலுவலகம் அந்த விண்ணப்பம் குறித்து முறையாக பதில் அளிக்காமல் இழுத்தடித்து காலதாமதம் செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக மேல்முறையீடு செய்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து என்.ஜி.மோகன், சென்னையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஆணையம் பதில் அளிக்காமல் அலைக்கழித்ததை உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து தாசில்தார் மணிமாறன் ரூ.10 ஆயிரம் அபராதமாக செலுத்த வேண்டும் என்றும், அந்த தொகையை விண்ணப்பித்த என்.ஜி.மோகனுக்கு இழப்பீடு தொகையாக வழங்கவும் உத்தரவிட்டது.

அதன்படி தாசில்தார் மணிமாறன், தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து ரூ.10 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலையை மோகனுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தார். மேலும் மோகனுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சான்றொப்பம் செய்தும் அனுப்பி வைத்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவத்தை அறியாத சில அதிகாரிகள் இதுபோன்று நடந்து கொள்வதால் தகவல் ஆணையம் தலையிட்டு விண்ணப்பதாரருக்கு முறையாக இழப்பீடு மற்றும் தகவலை பெற்றுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News