உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை மேலும் ரூ.5 சரிவு

Published On 2023-01-05 03:51 GMT   |   Update On 2023-01-05 03:51 GMT
  • பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
  • சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பண்ணையாளர்கள் முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.

இந்த கறிக்கோழி பண்ணைகள் மூலம் பல லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த கறிக்கோழிக்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. நேற்று நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு ரூ.5 குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது.

அதன்படி ரூ.114 ஆக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி ரூ.109 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கலில் நடந்தது. இதில் முட்டை கோழியின் தேவை குறித்தும் உற்பத்தி குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் முட்டை கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் ரூ.85 ஆகவே நீடிப்பது என்று அறிவிக்கப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளரிடம் ஆலோசிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் மாற்றம் செய்யப்படாததாலும் முட்டை விற்பனை சீராக இருப்பதாலும் விலையில் மாற்றம் செய்யாமல் 555 காசாக நீடிக்கலாம் என வலியுறுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பண்ணையாளர்கள் முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News