பாவூர்சத்திரத்தில் தம்பதியை தாக்கி கைவரிசை- 140 பவுன் நகை கொள்ளை வழக்கில் தூத்துக்குடி கும்பல் சிக்கியது
- கொள்ளையர்கள் தம்பதியை தாக்கி விட்டு மேஜையில் இருந்த சாவிகளை எடுத்து பீரோவை திறந்து நகை, பணத்தை எடுத்து சென்றுள்ளனர்.
- எனவே பீரோ சாவியை தம்பதியினர் மேஜையில் வைத்திருப்பதை பல நாட்களாக நோட்டமிட்டு, அவர்களுக்கு அறிமுகமானவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதினர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் சிதம்பர நாடார் தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 88). இவரது மனைவி ஜாய் சொர்ண தேவி (83). இவர்கள் இருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆவர்.
இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் அரசு துறையில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அருணாசலம், ஜாய் சொர்ண தேவி ஆகிய இருவர் மட்டும் தனியாக இருந்தனர். அப்போது முகமூடி அணிந்து வந்த 4 பேர் இருவரையும் கட்டிப்போட்டு விட்டு பீரோவில் இருந்த 140 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
வள்ளியூரில் பணிபுரிந்து வரும் அவர்களது மகள் ராணி இரவு 10 மணிக்கு வீடு திரும்பிய போது தான் கொள்ளை சம்பவம் வெளியே தெரிந்தது.
சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது.
வீட்டில் சி.சி.டி.வி. கேமிரா இல்லாத நிலையில், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டின் நேரடி கண்காணிப்பில் ஒரு தனிப்படை, ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னரசு தலைமையில் 2 தனிப்படை என மொத்தம் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
கொள்ளையர்கள் தம்பதியை தாக்கி விட்டு மேஜையில் இருந்த சாவிகளை எடுத்து பீரோவை திறந்து நகை, பணத்தை எடுத்து சென்றுள்ளனர். எனவே பீரோ சாவியை தம்பதியினர் மேஜையில் வைத்திருப்பதை பல நாட்களாக நோட்டமிட்டு, அவர்களுக்கு அறிமுகமானவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதினர்.
இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள ஆஸ்பத்திரி ஒன்றின் சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் நடமாடுவது தெரிய வந்தது.
இதுகுறித்து நடத்திய விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்களுக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதும், இதில் ஈடுபட்ட மேலும் 2 பேர் பற்றிய தகவல்களும் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
கொள்ளையடித்த நகை, பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளார்கள்? இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.