பறக்கும்படை சோதனையில் ஒரே வாரத்தில் ரூ.1.47 கோடி பறிமுதல்
- பறக்கும்படை அதிகாரிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை சோதனை நடத்தி வருகின்றனர்.
- பணம் பறிமுதல் செய்யப்பட்டு அங்குள்ள கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி:
நீலகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பறக்கும்படை அதிகாரிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக வாகன தணிக்கை சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது ரூ.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரொக்கப்பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவருவோரிடம் சம்பந்தப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு அங்குள்ள கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நீலகிரி பறக்கும்படை அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக வாகனத்தணிக்கை சோதனை நடத்தி வாகனங்களில் செல்வோர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருக்கும் ரூ.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணக்கட்டுகளை பறிமுதல் செய்து வருகிறோம்.
இதன் ஒருபகுதியாக ஊட்டி சட்டசபை தொகுதியில் ரூ.4,84,500, கூடலூர் தொகுதியில் ரூ.51,18,400, குன்னூர் தொகுதியில் ரூ.17,98,870 என நீலகிரி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.74,1770 பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பவானி சாகர் தொகுதியில் ரூ.49,6238, மேட்டுப்பாளையம் தொகுதியில் ரூ.8,40,800, அவிநாசி தொகுதியில் ரூ.16,36 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 47 லட்சத்து 84 ஆயிரத்து 808 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக பறக்கும்படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.