உள்ளூர் செய்திகள்

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற வாலிபர் மரணம்- 2 பேர் கைது

Published On 2024-03-30 09:01 GMT   |   Update On 2024-03-30 09:01 GMT
  • சிகிச்சை பெற்று வந்த கிஷோர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
  • கிஷோரின் தந்தை பிச்சைமுத்து கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரனிடம் புகார் அளித்தார்.

சரவணம்பட்டி:

கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவர் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகன் கிஷோர் (வயது22). கிஷோர் போதை பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. இதையடுத்து அவரது பெற்றோர் கிஷோரை கோவை அருகே கோவில்பாளையத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவர் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி முதல் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் அடிக்கடி அதிக அளவில் கூச்சல் போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று கிஷோர் தன்னை வீட்டிற்கு அனுப்புமாறு அதிக அளவில் கூச்சல் போட்டுள்ளார். அங்கிருந்த வார்டன் சொல்லி பார்த்தும் அவர் கேட்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த காப்பாளர் அரவிந்த்சாமி மற்றும் மனநல ஆலோசகர் பிரசன்னராஜ் ஆகியோர் அவர் சத்தம் போடாமல் இருப்பதற்காக அவரது வாயில் டேப் மற்றும் துணியால் கட்டியுள்ளனர். இதில் சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார்.

இதனால் அதிர்ச்சியான அவர்கள், அவரை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிஷோர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கிஷோர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கிஷோரின் தந்தை பிச்சைமுத்து கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரனிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் போதை மறுவாழ்வு மைய வார்டனான ஆலாந்துறையை சேர்ந்த அரவிந்த்சாமி, திருப்பூர் சூசைபுரத்தை சேர்ந்த உளவியல் நிபுணர் பிரசன்னராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News