கவுந்தப்பாடியில் கான்கிரீட் கலவை எந்திரம் மோதி 2 தொழிலாளர்கள் பலி
- கான்கிரீட் கலவை எந்திரம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- சம்பவ இடத்திலேயே தமிழ்செல்வன், சக்திவேல் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பலியானார்கள்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் காசிபாளையம் காந்திஜி வீதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (55). ஈரோடு- கரூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (45). இவர்கள் 2 பேரும் தொழிலாளர்கள்.
இன்று காலை 11.30 மணி அளவில் இவர்கள் கவுந்தப்பாடி அருகே ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டில் செம்புத்தம்பாளையம் என்ற பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கான்கிரீட் கலவை எந்திரம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய அவர்கள் கீழே விழுந்தனர். அப்போது கான்கிரீட் கலவை எந்திரம் மோட்டார் சைக்கிளுடன் 2 பேரையும் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்து சென்றது.
இதில் சம்பவ இடத்திலேயே தமிழ்செல்வன், சக்திவேல் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பலியானார்கள். இதுகுறித்து தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு கவுந்தப்பாடி போலீசார் விரைந்து சென்று பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக கான்கிரீட் கலவை எந்திரத்தை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் மேட்டூர் விருத்தாசம்பட்டியை சேர்ந்த திவ்யநாதன் (40) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.