உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் கடற்கரையில் இருளர்கள் குவிந்தனர்- 25 ஜோடிகள் திருமணம் செய்தனர்

Published On 2023-03-06 06:45 GMT   |   Update On 2023-03-06 06:45 GMT
  • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பேர் கலந்து கொண்டனர்.
  • மாமல்லபுரம் கடற்கரை பகுதியே விழாக்கோலமாக காணப்பட்டது.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் கடற்கரையில் இன்று மாசி மக விழாவையொட்டி ஏராளமான பழங்குடி இருளர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். இதற்காக அவர்கள் நேற்று இரவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாமல்லபுரத்திற்கு வந்தனர்.

அவர்கள் கடற்கரையோரங்களில் குடில் அமைத்து தங்கி இருந்தனர். இன்று அதிகாலையில் இருந்தே இருளர்களின் மாசிமக திருவிழா விமரிசையாக தொடங்கியது.

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பேர் கலந்து கொண்டனர். இதனால் மாமல்லபுரம் கடற்கரை பகுதியே விழாக்கோலமாக காணப்பட்டது.

இருளர்கள் தங்களது குலதெய்வமான கன்னியம்மனை நினைத்து கடல் மண்ணில் கோவிலாக அலங்காரம் செய்து வழிபட்டனர். அப்போது பூசாரிகள் சிலர் குறி கூறினர்.

இதேபோல் கடற்கரையில் நிச்சயதார்த்தம், திருமணம், காதுகுத்து, மொட்டையடித்தல் உள்ளிட்ட குலதெய்வ வழிபாட்டு வேண்டுதல்களை நிறைவேற்றினர். பாரம்பரிய திருமண விழாவால் அப்பகுதியே களை கட்டியது. சுமார் 25-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது.

பின்னர் வந்திருந்த இருளர்கள் தற்காலிகமாக அமைத்து தங்கியிருந்த சேலைக் குடில்களில் சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

இன்று இரவு விடிய, விடிய ஆட்டம், பாட்டம், கூத்து, தப்பாட்டம், திருநங்கைகள் நடனம் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இரவு முழுவதும் கடற்கரை மணலில் உற்சாகமாக விழாவை கொண்டாடுகின்றனர். நாளை காலை கடற்கரை கோவிலின் வடபுறம் மீனவர் பகுதியில் தீர்த்தவாரி விழா நடக்கிறது. இதில் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து மாமல்லபுரத்தில் இருந்து இருளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல உள்ளன். இருளர் விழாவையொட்டி போக்குவரத்து வசதிக்காக செங்கல்பட்டு, தாம்பரம் பகுதியில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின் படி இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News