திருச்சியில் அதிரடி சோதனை: பயங்கர ஆயுதங்களுடன் 3 ரவுடிகள் கைது
- திருச்சி மாவட்டத்தில் 349 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்ளனர்.
- 11 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் இருப்பிடங்கள் மற்றும் ரவுடிகளின் கூட்டாளிகளின் இருப்பிடங்களை சோதனை செய்ய உத்தரவிட்டார். அதன்படி 166 ரவுடிகளின் வீடுகள் மற்றும் 3 ரவுடிகளின் கூட்டாளிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த ரவுடி விக்னேஷ், தீன தயாளன், அவரது கூட்டாளி மணிகண்டன் என்கிற மன்னாரு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும் போது, திருச்சி மாவட்டத்தில் 349 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்ளனர். அதில் பல்வேறு வழக்குகளில் 32 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 11 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். 152 பேருக்கு நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டும், 60 பேருக்கு நன்னடத்தை பிணைய பத்திரம் பெற உதவி கலெக்டருக்கு வேண்டுகோள் கடிதம் கொடுக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குற்ற சம்பவங்களை தடுக்க மீதமுள்ள ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம் என்றனர்.