விடுதியில் தங்கி படித்த 4 மாணவிகள் விஷம் தின்று தற்கொலை முயற்சி
- 4 மாணவிகள் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தகவலறிந்த வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை தனி வட்டாட்சியர் மற்றும் வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது.
இந்த விடுதியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஆரம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் தங்கி, வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். கடந்த 19-ம் தேதி கோகுலாஷ்டமிக்கு பள்ளி விடுமுறை என்பதால், 4 மாணவிகளும் விடுதியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில் மாணவிகள் கொட்டைப்புத்தூர் கிராமத்திலுள்ள தோழியின் வீட்டிற்கு சென்று விட்டு, பின்னர் மறுநாள் தங்களது வீட்டிற்கு சென்றனர். இதையடுத்து நேற்று வீட்டிலிருந்து விடுதிக்கு வந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல், நேற்று இரவு விடுதியில் வைத்து எலி பேஸ்ட்டை தின்றுள்ளனர். இதனால் விஷம் உடல் முழுவதும் பரவியதை அடுத்து இன்று காலையில் வாந்தி எடுத்தனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விடுதி சமையலர் சத்தியம்மாள், மாணவிகள் 4 பேரையும் அழைத்துச் சென்று வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை தனி வட்டாட்சியர் மற்றும் வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 மாணவிகள் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.