4 ஆயிரம் வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு
- வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நீடிக்கிறது.
- மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக வீடுகள், வெல்ல ஆலையில் இருந்த குடியிருப்புகள், டிராக்டர்களுக்கு தீ வைப்பது, வீடுகள் மீது மண்எண்ணை பாட்டில் வீச்சு உள்ளிட்ட சம்பவங்களும், ஆயிரக்கணக்கான பாக்கு, வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றது.
இதனை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் அப்பகுதியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டும், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர் செல்லும் சாலையில் இரவு நேரத்தில் இரும்பு தடுப்புகள் அமைத்து வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. ஏராளமான போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் கோவை மண்டல போலீஸ் துறைத் தலைவர் சுதாகர் தலைமையில் சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோமணி (எ) சுப்பிரமணி (42) என்பவரது 5 ஏக்கரில் பயிர் செய்து இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான சுமார் 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.
இன்று காலை விவசாய தோட்டத்திற்கு வந்த சுப்பிரமணி 5 ஏக்கரில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இது குறித்த தகவலின் பேரில் நாமக்கல் மாவட்ட போலீஸ் கமிஷனர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி, பரமத்தி இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ சுகன்யா, பரமத்திவேலூர் தாசில்தார் தமிழ்ச்செல்வி மற்றும் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து நாமக்கல்லில் இருந்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஜேடர்பாளையம் பகுதியில் தொடரும் இச்சம்பவத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நீடிக்கிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.