பெருந்துறை அருகே மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
- கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளை சாலையோரம் போட்டுவிட்டு அங்கு உள்ள மறைவான இடத்திற்கு சென்று தப்பி ஓடிவிட்டனர்.
- இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில் அருகே உள்ள பெத்தாம்பாளையம் பிரிவில் முத்தாயம்மாள் (52) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 9.30 மணியளவில் இவர் வழக்கம் போல் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது முத்தாயம்மாள் மளிகை கடைக்கு ஒரு வாலிபர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வந்தார். அவர் கேட்ட பொருட்களை முத்தாயம்மாள் அவரிடம் கொடுத்து விட்டு கடையை விட்டு வெளியே வந்தார்.
அப்போது திடீரென அந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் முத்தாயம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார். சிறிது தூரத்தில் மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார். அவரது மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்தாயம்மாள் திருடன்..திருடன் என கத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஒன்று கூடி கொள்ளையர்களை விரட்டினர். அப்போது அந்த கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளை சாலையோரம் போட்டுவிட்டு அங்கு உள்ள மறைவான இடத்திற்கு சென்று தப்பி ஓடிவிட்டனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து காஞ்சி கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து பதிவு எண்ணை கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.