உள்ளூர் செய்திகள்

விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்- 3 இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 6 போலீசார் இடமாற்றம்

Published On 2023-04-05 13:12 GMT   |   Update On 2023-04-05 13:12 GMT
  • தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
  • மேலும் 6 போலீசாரை இடமாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் குற்ற வழக்குகள் தொடர்பாக விசாரணைக்காக சென்றவர்களின் பற்கள் பிடுங்கியதாக புகார் எழுந்தது.

இந்த சம்பவம் நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளத்தில் பரவி வைரல் ஆனது.

இதைத் தொடர்ந்து அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதுதொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது ஷபீர் ஆலம் பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தி வருகிறார். மனித உரிமைகள் ஆணையமும் இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே கல்லிடைக்குறிச்சி தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார், விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு காவலர் போகன் ஆகியோரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆயுதப்படைக்கு மாற்றினார்.

மேலும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனும் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்று போலீஸ் நிலையங்களில் நடக்கும் சம்பவங்களை உயர் அதிகாரிகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கவில்லை எனக்கூறி நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி, சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் விசாரணை கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட அம்பை, வீ.கே.புரம், கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் நேற்று மாலை சப்-கலெக்டர் முகம்மது ஷபீர் ஆலம் விசாரணை நடத்தினார். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை உடனடியாக ஒப்படைக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 6 போலீசாரை இடமாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அம்பை இன்ஸ்பெக்டர் சந்திர மோகன், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, வீ.கே.புரம் இன்ஸ்பெக்டர் பெருமாள், அம்பை உட்கோட்ட தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன்1, அம்பை தனிப்படை காவலர்கள் மணிகண்டன் மற்றும் சந்தன குமார் ஆகிய 6 பேர் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சப்-கலெக்டர் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் சில போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. 

Tags:    

Similar News