தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு
- கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக நிலக்கரிகள் தண்ணீரில் நனைந்ததாக கூறப்படுகிறது.
- யூனிட்டுகளை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
யூனிட்டுகளை இயக்குவதற்கு தேவையான நிலக்கரிகள் அங்குள்ள வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக நிலக்கரிகள் தண்ணீரில் நனைந்ததாக கூறப்படுகிறது. இதனால் யூனிட்டுகளை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து அனல்மின் நிலையத்தின் 3,4 மற்றும் 5-வது யூனிட்டுகள் இன்று காலை நிறுத்தப்பட்டது.
1 மற்றும் 2-வது யூனிட்டுகள் வழக்கம்போல் இயங்கி வருகிறது. இதனால் 630 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது நிலக்கரியின் ஈரப்பதம் காய்ந்த பின்னர் இன்று மாலை அல்லது இரவு முதல் அனைத்து யூனிட்டுகளும் இயக்கப்படும் என தெரிவித்தனர்.