உள்ளூர் செய்திகள்

முகூர்த்த நாளில் பத்திரப்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு...

Published On 2023-08-18 03:17 GMT   |   Update On 2023-08-18 03:17 GMT
  • கடந்த 3-ந்தேதி ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக 50 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டன.
  • 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.

சென்னை:

சுபமுகூர்த்த தினமான வருகிற 21-ந்தேதி பத்திர பதிவுக்காக கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக 50 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டன.

அன்றைய தினம் மாநிலம் முழுவதும் 14 ஆயிரத்து 449 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன்மூலம் ரூ.100 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான வருகிற 21-ந்தேதி அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால் கூடுதல் முன்பதிவு டோக்கன் வழங்க வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதை ஏற்று 21-ந்தேதி ஒரு சார்பதிவாளர் பணியில் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் பணியில் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும். 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.

இதுதவிர ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News