உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் நாளை சென்னை வருகை- எடப்பாடி பழனிசாமி அணி உற்சாகம்

Published On 2022-07-09 05:31 GMT   |   Update On 2022-07-09 07:31 GMT
  • அ.தி.மு.க. பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் மட்டுமின்றி மக்கள் மனதிலும் நிலவுகிறது.
  • தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருமோ என்று இருதரப்பினரும் திக், திக் மனநிலையுடன் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை சர்ச்சை எழுந்ததால் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியினரும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினரும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களில் 97 சதவீதம் பேர் ஆதரவு உள்ளது. மேலும் கட்சி தொண்டர்களும் 99 பேர் சதவீதம் எடப்பாடி பழனிசாமியையே ஆதரிக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியதால் ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிகள் பறிக்கப்படுவது உறுதியானது. அந்த பதவிகளை விட்டுவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை ஐகோர்ட்டை நாடினார்.

தேர்தல் ஆணையம் இதுவரை ஓ.பன்னீர் செல்வம் கொடுத்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை ஐகோர்ட்டில் அவர் தொடர்ந்த வழக்கும் எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவால் தகர்க்கப்பட்டது.

இதற்கிடையே தனக்கு எதிராக எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடர்ந்தார். கடந்த 2 நாட்களாக அந்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நடந்தது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும், எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் வக்கீல்கள் கடும் வாதம் செய்தனர். நேற்று மாலை வரை அந்த வழக்கு விசாரணை நீடித்தது.

இறுதியில் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்தார்.

திங்கட்கிழமை (11-ந்தேதி) காலை 9.15 மணிக்கு அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஆனால் 9 மணிக்கு தான் தீர்ப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டு இருப்பதால் அ.தி.மு.க. வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.

அ.தி.மு.க. பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் மட்டுமின்றி மக்கள் மனதிலும் நிலவுகிறது. தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருமோ என்று இருதரப்பினரும் திக், திக் மனநிலையுடன் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் திட்டமிட்டபடி திங்கட்கிழமை காலை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்திவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

வானகரம் ஸ்ரீ வாரு திருமண மண்டப வளாகத்தில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில் 90 சதவீதம் பணிகள் நடந்து முடிந்து விட்டன. மீதம் உள்ள 10 சதவீத பணிகளும் நாளை முடிந்து விடும் என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் நடக்குமா என்ற சந்தேகம் பொதுக்குழு உறுப்பினர்களிடையே எழுந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அணியின் மூத்த தலைவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.

அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களை சென்னைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யபபட்டுள்ளன. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் சென்னைக்கு வந்துவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் உற்சாகத்துடன் சென்னைக்கு வர தொடங்கி விட்டனர்.

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கியூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. பொதுக்குழு கூட்டத்துக்கு வருபவர்கள் எங்கெங்கு தங்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு உள்ளன. எடப்பாடி பழனிசாமி அணியினர் அனைத்து வகையிலும் முழு ஏற்பாடுகளும் செய்து தயார் நிலையில் உள்ளனர்.

கோர்ட்டு தீர்ப்பு திங்கட்கிழமை காலை அறிவிக்கப்பட்டதும் அதற்கேற்ப செயல்பட மூத்த தலைவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பு நிலவுகிறது.

எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள மூத்த தலைவர்கள் அனைவரும் தங்களுக்கு சாதகமாக கோர்ட்டு தீர்ப்பு வரும் என்று 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இது குறித்து அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் உள்ளது. அவரது முட்டுக்கட்டைகளால் கட்சிப் பணிகள் தேங்கிவிட்டன. கட்சி நிர்வாகிகளுக்கு முறையாக சம்பளம் கூட கொடுக்க முடியவில்லை.

பாராளுமன்ற மேல்சபை தேர்தலின் போது அ.தி.மு.க. வேட்பாளர்களை ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்ய முடியாமல் போனதற்கு அவர்தான் காரணமாகும். அவரது சுயநலத்தால் அ.தி.மு.க.வை அழிக்க பார்க்கிறார். அவரது மகன் தி.மு.க. தலைவரை சந்தித்து பேசுகிறார். இதையெல்லாம் நாங்கள் எப்படி ஏற்க முடியும்.

ஓ.பன்னீர்செல்வத்தை சரியான வழியில் கொண்டு வர அ.தி.மு.க. தலைவர்கள் அனைவரும் பேசி விட்டோம். அவர் சுயநலத்துடன் மட்டுமே இருக்கிறார். கட்சி நலனை பார்க்கவே இல்லை.

எனவே இனி அவருடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது. ஒற்றை தலைமைக்கு அ.தி.மு.க. உறுப்பினர்களில் 2432 பேரின் ஆதரவு இருக்கிறது. எனவே கட்சி நலனுக்கான முடிவுகள் உறுதியாக எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News