உள்ளூர் செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகர் கைது

Published On 2023-03-11 07:25 GMT   |   Update On 2023-03-11 07:25 GMT
  • பாதிக்கப்பட்ட மார்கரேட் ஜெனிபர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
  • திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் உத்தரவின் பேரில் துவாக்குடி போலீசார் நேற்று இரவு வீரமலையை கைது செய்தனர்.

திருச்சி:

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண் பிரசாத். இவரது மனைவி மார்கரேட் ஜெனிபர். இவர் நர்சிங் படிப்பு முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2021 ஆண்டில், அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை வாங்கி தருவதாக சொல்லி கிருஷ்ண சமுத்திரத்தை சேர்ந்த லாசர், தேனீர் பட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க. திருவெறும்பு தெற்கு ஒன்றிய பொருளாளர் (எடப்பாடி அணி) வீரமலை, சூரியூரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி சுப்பிரமணி ஆகியோர் மார்கரேட் ஜெனிபரிடம் ரூ.4 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளனர். கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்கும் அவர்கள் கொடுக்க மறுத்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மார்கரேட் ஜெனிபர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து லாசரை கைது செய்தனர்.

இதில் தொடர்புடைய சுப்ரமணியும், வீரமலையும் கைதாகாமல் முன் ஜாமீனுக்கு முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில் நீதிமன்றத்தில் அவர்களின் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இருந்த போதிலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்பட்டது. இந்த நிலையில் மார்கெட் ஜெனிபர், திருச்சி ஐஜி, டிஐஜி, எஸ்.பி, மற்றும் திருவெறும்பூர் டி.எஸ்.பி. ஆகியோரிடம் மீண்டும் புகார் மனுகொடுத்துள்ளார்.

இந்த நிலையில் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் உத்தரவின் பேரில் துவாக்குடி போலீசார் நேற்று இரவு வீரமலையை கைது செய்தனர். வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருவெறும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் வழக்கில் தொடர்புடைய மற்றொரு அ.தி.மு.க. நிர்வாகியான சுப்பிரமணியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News