நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் ஸ்ரீமதி உயிரிழப்பு- முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு
- தொண்டர்களால் கோவிலாக மதிக்கப்படும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
- அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வதுண்டு. அதன்படி இந்த செயலில் ஈடுபட்ட நபர் மறுநாளே விபத்தில் சிக்கியதாக செய்தி வந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளை நீக்குவதும், பின்னர் சேர்ப்பதும் போன்ற அறிக்கையை தினந்தோறும் வெளியிட்டு வருகிறார். ஆனால் அதைப்பற்றி அ.தி.மு.க. தொண்டர்களுக்கோ, நிர்வாகிகளுக்கோ கவலை இல்லை. அவருக்கு கொடுத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
தொண்டர்களால் கோவிலாக மதிக்கப்படும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வதுண்டு. அதன்படி இந்த செயலில் ஈடுபட்ட நபர் மறுநாளே விபத்தில் சிக்கியதாக செய்தி வந்தது.
இதன்மூலம் அ.தி.மு.க.வுக்கு யார்? தீங்கு செய்ய நினைத்தாலும் அவர்களுக்கு எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் ஆன்மா தண்டனை வழங்கும். தி.மு.க. ஆட்சியில் சாமானிய மக்கள் மின்சாரத்தை பயன்படுத்த முடியாத அளவுக்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள்.
இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வால் தோல்வி அடைந்த ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின்பு சுதாரித்துக்கொண்ட சீனிவாசன், நான் மாற்றி கூறி விட்டேன். அவர் நீட் தேர்வால் உயிரிழக்கவில்லை என்று சமாளித்து பதில் அளித்தார்.