அரசின் மதுபானங்களை வீட்டில் பதுக்கி விற்ற நபர் கைது
- வீட்டில் 100-க்கும் மேற்பட்ட அரசு மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
- 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் இணைந்து மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த குருப்பநாயக்கன் பாளையம் சினிமா கோட்டை வீதியில் ஒரு வீட்டில் அரசின் மதுபானங்களை உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகத்துக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் பேரில் மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டில் 100-க்கும் மேற்பட்ட அரசு மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து வீட்டில் உரிமையாளரிடம் விசாரணை நடத்திய போது அவர் அதே பகுதியை சேர்ந்த சந்தானம் (48) என தெரிய வந்தது. சந்தானம் பவானி, சித்தோடு, அம்மாபேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கி அதை வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிகின்றது.
இது குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தனத்தை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் இருந்த 100 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.