ரெயில் பயணிகளிடம் 12 செல்போன்களை திருடிய ஆந்திர வாலிபர் கைது
- ரெயில் நிலையத்தில் சந்தேகம் படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கும், இங்கும் நடமாடி கொண்டிருந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
திருச்சி மாவட்டம் உறையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜசிம் (17). திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 3-ந் தேதி நண்பர்களுடன் கோவையில் நடக்கும் போட்டோகிராபி போட்டியில் பங்கேற்க செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.
ஈரோட்டில் ரெயில் நின்ற போது முகமது ஜசிம் தின்பண்டம் வாங்குவதற்காக ரெயிலை விட்டு கீழே இறங்கினார். பின்னர் மீண்டும் ரெயிலில் ஏறி தனது படுக்கைக்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட் போன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.
இதனையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் ஒவ்வொரு நடை மேடையாக சென்று சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது ஈரோடு ரெயில் நிலையத்தில் சந்தேகம் படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கும், இங்கும் நடமாடி கொண்டிருந்தார்.
அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் உதயகிரி பகுதியை சேர்ந்த ஓம்காரம் வெங்கட சுப்பையா (27) என்பதும், அவர் ரெயில் பயணிகளிடம் செல்போன்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 12 ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கட சுப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்கள் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.