உள்ளூர் செய்திகள்

இரு தரப்பினர் மோதல்- போலீஸ் ஏட்டு மண்டை உடைப்பு

Published On 2024-02-06 05:01 GMT   |   Update On 2024-02-06 05:01 GMT
  • இருதரப்பினர் இடையே போலீசார் பேசிக் கொண்டிருக்கும்போதே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.
  • அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் அரசியல் கட்சி தலைவரின் பாடலுக்கு அவரது கட்சியினர் ஆட்டம் போடுவது போல திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டு வீடியோ வெளியிட்டு உள்ளனர்.

அதில் மற்றொரு தரப்பினர் ஜாதி பெயரை குறிப்பிட்டு அவதூறான கருத்துக்கள் பதிவிட்டுள்ளனர். அதற்குக் கீழ் கல்பகனூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு சமுதாயம் குறித்து அவதூறு வார்த்தைகளால் பதிவிட்டுள்ளார்.

தலையில் காயம் அடைந்த ஏட்டு முருகவேல்

மேலும் அதனை தனது வாட்ஸ்-அப் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார். அதனைப் பார்த்த மற்றொரு சமுதாயத்தினர் பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் பச்சமுத்து தலைமையில் ஆத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுத்னர்.

இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையில் 3 போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். அப்போது இருதரப்பினர் இடையே போலீசார் பேசிக் கொண்டிருக்கும்போதே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து இருதரப்பினரும் செங்கற்களை மாறி மாறி வீசினர்.


இதனால் அப்பகுதியில் உள்ள இரு சக்கர வாகனம், 4 சக்கர வாகனம் மற்றும் அந்த பகுதியில் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் அடித்து சேதப்படுத்தினர். அப்போது அந்த பகுதி போர்க்களமாக காட்சி அளித்தது. தொடர்ந்து நடைபெற்ற கல்வீச்சில் பாதுகாப்பு பணிக்காக வந்த வீரகனூர் போலீஸ் ஏட்டு முருகவேல் என்பவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் கல்பகனூரில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாததால் லேசான தடியடி நடத்திய போலீசார் இரு தரப்பினரையும் கலைந்து போக செய்தனர்.

இது குறித்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், ஆத்தூர் டி.எஸ்.பி. நாகராஜ் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் ஆகியோரும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் வெளியூர் நபர்கள் உள்ளே நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News