உள்ளூர் செய்திகள்

சக்திவேலின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பண்ருட்டியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவரை வெட்டிக்கொன்ற நண்பர்

Published On 2022-09-10 08:50 GMT   |   Update On 2022-09-10 08:50 GMT
  • கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமன் மற்றும் அவரது நண்பர் ஒருவரையும் கைது செய்தனர்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் சக்திவேல். ஆட்டோ டிரைவர். திருமணமான இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பூமிகா என்பவர் அறிமுகமானார்.

இவர் கணவரை இழந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். பண்ருட்டியில் உள்ள பேக்கரிக்கு வேலைக்கு செல்லும் போது சக்திவேலின் ஆட்டோவில் பூமிகா செல்வது வழக்கம். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

சக்திவேலின் நண்பர் சுமன். இவர் களத்துமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆவார். இவரும் அடிக்கடி பூமிகாவை ஆட்டோவில் அழைத்து சென்று பேக்கரியில் விடுவதுண்டு.

அப்போது பூமிகாவை, சுமன் விரும்பினார். ஆனால், பூமிகா, ஆட்டோ டிரைவர் சக்திவேலுடன் நெருங்கி பழகுவதை சுமன் அறிந்தார். இது குறித்து நேரடியாக சுமன், தனது நண்பர் சக்திவேலிடம், நான்தான் பூமிகாவை விரும்புகிறேன் என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

நேற்று இரவு சுமன், தனது நண்பர் சக்திவேலிடம் வந்து என்னை மன்னித்து விடு, இருவரும் முன்புபோல் பழகுவோம் என கூறினார். இந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக மது அருந்த போகலாம் என அழைத்தார்.

இதனை நம்பிய சக்திவேல், அவருடன் சென்றார். பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளி கோவிலின் பின்புறம் சுடுகாட்டு பகுதியில் இருவரும் மது குடித்தனர். போதை தலைக்கு ஏறியதால் அப்போது சுமன் தனது நண்பர் சக்திவேலை பார்த்து இனி, பூமிகா விவகாரத்தில் நீ தலையிடக்கூடாது என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சத்தம் கேட்டு சுமனின் நண்பர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சுமனுக்கு ஆதரவாக பேசினர். ஆத்திரம் அடைந்த அவர்கள் சக்திவேலை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

அதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். இன்று காலை காளி கோவில் பகுதியில் சக்திவேல் பிணமாக கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த போலீஸ் டி.எஸ்.பி. சபிபுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமன் மற்றும் அவரது நண்பர் ஒருவரையும் கைது செய்தனர்.

இதனையறிந்த சக்திவேலின் உறவினர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் பண்ருட்டியில் உள்ள தட்டாஞ்சாவடி-சித்தூர் சாலையில் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்தனர்.

அப்போது, சக்திவேலின் உறவினர்கள் கூறுகையில், இந்த கொலையில் 4-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் கைது செய்ய வேண்டும். அதோடு பூமிகாவையும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

உடனே போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன் பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். என்றாலும் அங்கு பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News