search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police investigation"

    • ஆட்டோ டிரைவரை இளம்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
    • மிர்சாபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போன்களின் பயன்பாடு அதிகமாக உள்ள தற்போதைய காலக்கட்டத்தில், அதனை பயன்படுத்தி வித்தியாசமான வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பதிவிடுகிறார்கள். அவ்வாறு பதிவிடுபவர்களில் பலர், வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளை வாங்க வேண்டும் என்று எடுக்கும் வீடியோக்களின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

    அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. மிர்சாபூரில் ஆட்டோ டிரைவரை இளம்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனால் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும், உண்மைக்கு மாறான கருத்துகளை கூறி வீடியோ பதிவு செய்துள்ளதாகவும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் அந்த ஆட்டோ டிரைவர்.

    ஆட்டோவில் இருந்து அவர்களை இறக்கிவிட்டு கட்டணம் கேட்டபோது, அவர்கள் மாணவிகள் என்று கூறி கட்டணம் தர மறுத்துவிட்டனர். நான் தொடர்ந்து கட்டணம் கேட்டபோது, அவர்களில் ஒருவர் என் காலரைப் பிடித்து, தனது மொபைலை சகோதரியிடம் கொடுத்து அதை பதிவு செய்யச் சொன்னார். பின்னர் நான் கட்டணம் வேண்டாம் என்று சொன்னேன். நான் அவர்களைத் தொடக்கூட இல்லை. எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறிய ஆட்டோ டிரைவர் அவரது மார்பில் காயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

    இதனிடையே, வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பெண் இதுகுறித்து கூறுகையில், அந்த நபர் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதால் அவரை அடித்தேன். இதனை தொடர்ந்து எனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வந்தன. இதன்பின்னரே அந்த வீடியோவை நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன் என்று கூறினார்.

    இருவரின் முரண்பட்ட தகவல்களால் யார் மீது தவறு உள்ளது என்பது குறித்து மிர்சாபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



    • ஊத்தங்கரையில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு நேற்று சென்றனர்.
    • விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பத்தை அடுத்த சின்னபனமுட்லுவை சேர்ந்தவர் சரத்குமார் (வயது33). கூலி தொழிலாளி.

    அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர்கள் நாகன், (40), ஹரிஷ், (20) ஆகிய 3 பேரும் இருசக்கர வகானத்தில் ஊத்தங்கரையில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு நேற்று சென்றனர்.

    பின்னர் 3பேரும் அதே வண்டியில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது மதியம் 3 பேரும் ஜெகதேவி பஸ் நிறுத்தம் அருகில் திண்டிவனம்-கிருஷ்ணகிரி சாலையில் வந்தபோது கடலூரிலிருந்து ஓசூர் சென்ற அரசு பஸ், அவர்கள் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த 3 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த 3 பேரின் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் விபத்தில் பலியான சரத்குமார், நாகன், ஹரிஷ் ஆகிய 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெகதேவி பஸ் நிறுத்த பகுதியில், தினமும் விபத்து நடக்கிறது. இதை கட்டுப்படுத்த இப்பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • வாகனத்தை கைப்பற்றி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
    • தப்பி ஓடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள், பீடி இலை, டீசல் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் படகு மூலம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதும், அதனை போலீசார் தடுத்து நிறுத்தி கைப்பற்றும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு தூத்துக்குடி கடற்கரை வழியாக பீடி இலைகள் படகுமூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜ் குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது இன்று அதிகாலை தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் போலீசார் வருவதை பார்த்ததும் மினி லாரியில் வந்த நபர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடினர்.

    அந்த வாகனத்தை கைப்பற்றி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 40 மூட்டைகளில் 1200 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரியை கைப்பற்றி கடத்தலில் ஈடுபட்டவர்கள், தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.

    • வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடந்ததுடன், அதில் உள்ள துணிமணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
    • கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பல்லடம் சாலை, ரத்தினம் நகரை சேர்ந்தவர் கார்த்திக். பல் மருத்துவராக உள்ளார்.

    இவர் பொங்கலையொட்டி வெளியூரில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். மறுநாள் காலையில் பக்கத்து வீட்டுக்காரர் சென்று பார்த்தபோது டாக்டர் வீட்டின் கதவு திறந்திருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாக கார்த்திக்கை செல்போனில் தொடர்பு கொண்டு கதவு திறந்து இருப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து டாக்டர் கார்த்திக் வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடந்ததுடன், அதில் உள்ள துணிமணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    மேலும் அதில் வைத்திருந்த 136 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் மாயமாகி இருந்தது. கார்த்திக் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், ஆள் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கார்த்திக் உடனடியாக மகாலிங்கபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீஸ் டி.எஸ்.பி. சிருஷ்டிசிங் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். டாக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராமகிருஷ்ணன் நகையையும் கொள்ளையடித்து கொண்டு சென்றுவிட்டார்
    • தெலுங்கானா, ஆந்திராவில் 7-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.

     நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி சிவா தெருவை சேர்ந்தவர் ஆரோக்கிய ரெமன். இவர் மூலைக்கரைப்பட்டி பஜார் பகுதியில் ஒரு வணிக நிறுவனத்தின் மாடியில் அடகு கடை நடத்தி வந்தார். கீழ் தளத்தில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி அதிகாலையில் அடகு கடைக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்து ரூ. 3 லட்சம் பணம் மற்றும் 250 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றார்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக மூலைக்கரைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சி.சி.டி.வி.க்களை ஆய்வு செய்த போது மங்கி குல்லா அணிந்து வந்த மர்மநபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து நெல்லை சரக டி.ஜ.ஜி. மூர்த்தி ஆலோசனையின்பேரில், போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில் நாங்குநேரி டி.எஸ்.பி. பிரசன்னகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ராஜகுமாரி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ரெட்டார் குளத்தை சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் ராமகிருஷ்ணன் (வயது 35) என்பவர் இந்த கொள்ளையை நிகழ்த்தியதும், அவர் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 137 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.

    விசாரணைக்கு பின்னர் நாங்குநேரி கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி இன்று காலை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை அறிந்த ராமகிருஷ்ணனின் தாய் மீனாட்சி (65) விசாரணைக்கு பயந்து நேற்று அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இந்த சம்பவத்தில் ராமகிருஷ்ணன் ஈடுபட்டது எப்படி?. வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.

    ராமகிருஷ்ணன் பல ஆண்டுகளாக தெலுங்கானா மாநிலத்தில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கே தன்னுடன் பணிபுரிந்த ஒரு இளம்பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் மீது தெலுங்கானா, ஆந்திராவில் 7-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.

    இவர் ஏற்கனவே மங்கி குல்லா அணிந்து நாசரேத் பகுதியில் திருட்டை நிகழ்த்தியதை அடிப்படையாக கொண்டு நடத்திய விசாரணையில் தற்போது அவர் சிக்கினார்.

    இவர் திட்டமிட்டோ, கூட்டாளிகளோடு சேர்ந்தோ எங்கும் கொள்ளையடிக்க செல்வதில்லை. தனியாக சாதாரணமாக சென்று பூட்டிய வீடுகளில் நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு பின்னர் 1 வருடம் வரை தெலுங்கானாவில் போய் தங்கி கொள்வார். பின்னர் சொந்த ஊருக்கு வந்து மீண்டும் கைவரிசை காட்டி விட்டு சென்றுவிடுவதாக அவர் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அடகு கடையில் கொள்ளை அடிக்கும் நாளுக்கு முந்தைய நாள் கோவில் கொடை விழாவுக்காக அவர் சொந்த ஊர் வந்துள்ளார். வந்த இடத்தில் தான் அடகு கடையில் கொள்ளையடிக்க அவர் உள்ளே சென்றுள்ளார். அப்போது பணத்திற்கு அருகிலேயே லாக்கரின் சாவியும் இருந்துள்ளது.

    அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராமகிருஷ்ணன் நகையையும் கொள்ளையடித்து கொண்டு சென்றுவிட்டார். அன்றைய தினமே அந்த நகைகளில் பாதியை தனது தாய் மீனாட்சியிடம் கொடுத்துவிட்டு மீதி நகைகளுடன் தெலுங்கானா சென்றுள்ளார்.

    இந்நிலையில் அங்கு தனது வழக்குகளை நடத்தி வரும் தெலுங்கானாவை சேர்ந்த வக்கீலிடம் பாதி நகைகளை கொடுத்துள்ளார். இவ்வாறாக நகைகளை மேலும் 2 பேரிடமும் கொடுத்து விட்டு அவ்வப்போது அதனை வாங்கி விற்று சொகுசாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

    மீனாட்சியிடம் கொடுத்த நகைகளை அவர் தனது மற்ற குழந்தைகளுக்கு பங்கு வைத்து கொடுத்துள்ளார். இதனை அறிந்த ராமகிருஷ்ணன் தனது தாயாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த சம்பவங்கள் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே பல்வேறு துப்புகளின் அடிப்படையில் ராமகிருஷ்ணனை போலீசார் நெருங்கிய நிலையில் இந்த சம்பவமும் அவர்களது சந்தேகத்தை உறுதியாக்கியது. தொடர்ந்து அவரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய வக்கீல் மற்றும் 2 பேரை போலீசார் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். மீதமுள்ள 113 பவுன் தங்க நகைகளையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • விபத்து குறித்து திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மதகடிப்பட்டு அருகே தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் லிங்காரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது52). இவர் மதகடிப்பட்டில் செல்போன் கடை நடத்தி வந்தார்.

    நேற்று இரவு இவர் மதகடிபட்டில் இருந்து வீட்டுக்கு செல்ல அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் முகிலன்(37) என்பவருடன் காரில் வந்தார். காரை முகிலன் ஓட்டி வந்தார்.

    இதுபோல் சென்னையை சேர்ந்தவர் பிரபாகரன்(57). இவர் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஏஞ்சல் (50) என்ற மனைவி உள்ளார். இவர்களது உறவினர் விபத்தில் காயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவரை பார்ப்பதற்காக பிரபாகரன் தனது மனைவி ஏஞ்சல் மற்றும் உறவினர் மகள் சிந்து (12) ஆகியோருடன் ரெயிலில் விழுப்புரத்திற்கு வந்தார். அங்கிருந்து காரில் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருந்தனர். காரை பானாம்பட்டு பகுதியை சேர்ந்த டிரைவர் சந்திரன் (38) என்பவர் ஓட்டி வந்தார்.

    நள்ளிரவு 11.30 மணியளவில் மதகடிபட்டு மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது இவர்களது காரும், முகிலன் ஓட்டி வந்த காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கதிரவன் மற்றும் அவரது நண்பர் முகிலன் மற்றொரு கார் டிரைவர் சந்திரன் ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    பிரபாகரன், அவரது மனைவி ஏஞ்சல் மற்றும் சிறுமி சிந்து ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக முண்டியப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே பிரபாகரன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரூ.1லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    • ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    திருச்சி:

    திருச்சி வயலூர் ரோட்டில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமானுஜம் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

    பின்னர் போதை பொருள் விற்பனை கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 4 பேர் பிடிபட்டனர்.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் திருச்சி கனரா பேங்க் காலனி சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்த பூஜித் (வயது 24), ஈரோடு டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த ஆல்வின்(23).

    இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்எஸ்சி படித்து வருகிறார்.

    திருச்சி ராஜா காலனி பகுதியை சேர்ந்தவர் நகுல் தேவ் (21). இவரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் நவீன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து ரூ.1லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

    கைதான போதைப்பொருள் விற்பனை கும்பலுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவனாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் செயல்பட்டு வருகிறார்.

    மேலும் கடத்தலுக்கு கோவையை சேர்ந்த ஒருவர் ஏஜென்டாக செயல்பட்டதும் தெரியவந்தது.

    இவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். மேற்கண்ட போதைப் பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பல்கள் மற்றும் படகுகள் மூலமாக இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக கூறப்பட்டது.

    கைதான இந்த நபர்கள் பெங்களூரில் இருந்து இந்த போதை பொருளை வாங்கி வந்து திருச்சி மாநகரில் விற்பனை செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
    • வீட்டின் ஒரு அறையில் குளிர்சாதன பெட்டி மற்றும் இன்னும் சில பொருட்களை வைத்துள்ளார்.

    லிவிங் டுகெதரில் இருந்த பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நேற்று ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதையடுத்து அந்த வீட்டிற்கு சென்ற அக்கம் பக்கத்தினர், வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்தனர். அப்போது சேலை அணிந்திருந்த பெண்ணின் அழுகிய உடலில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்பெண் நகைகள் அணிந்தும், கைகள், கழுத்து கயிற்றால் கட்டப்பட்டும், நெரிக்கப்பட்டும் காணப்பட்டது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    அப்போது, தீரேந்திர ஸ்ரீவஸ்தவா என்பவருக்கு சொந்தமான வீட்டில் உஜ்ஜைனியைச் சேர்ந்த படிதார் என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் வாடகைக்கு உள்ளார். அப்போது அவருக்கு பிங்கி பிரஜாபதி என்ற 30 வயதுடைய பெண்ணுடன் திருமணத்திற்கு முந்தைய உறவில் இருந்துள்ளார். இவர்களின் இந்த உறவானது 5 ஆண்டுகளாக தொடர்ந்துள்ளது.

    இதனிடையே, பிங்கி பிரஜாபதி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த படிதார் அவரை கொன்றுள்ளர். இதனால் செய்வதறியாது தவித்த படிதார், அப்பெண்ணின் உடலை குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்துள்ளார். இந்த கொலையானது கடந்த ஜூன் மாதம் நடந்ததாக கூறப்படுகிறது.

    குடியிருந்த வீட்டை காலி செய்த படிதார், அதே வீட்டின் ஒரு அறையில் குளிர்சாதன பெட்டி மற்றும் இன்னும் சில பொருட்களை வைத்துள்ளார். அடிக்கடி வந்து வீட்டின் அறைக்கு வந்து சென்றுள்ளார். இதையடுத்து கடந்த புதன்கிழமை அன்று அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்தே, குளிர்சாதன பெட்டியில் இருந்து துர்நாற்றம் வந்ததை அடுத்து பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

    • 5 பேரின் உடல்களிலும் காயங்கள் இருந்தன.
    • பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள லசாரிகேட் பகுதியை சேர்ந்தவர் மொயின். இவரது மனைவி அஸ்மா. இவர்களுக்கு அப்சா (வயது 8), அஜிசா (4) மற்றும் அதிபா (1) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

    இவர்களின் வீடு நேற்று முன்தினம் முதல் பூட்டப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அங்கு மொயின் மற்றும் அவரது மனைவி அஸ்மா ஆகியோர் தரையில் பிணமாக கிடந்தனர். அவர்களது 3 குழந்தைகளும் வீட்டில் இருந்த படுக்கை பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணமாக கிடந்தனர்.

    இதைக்கண்டு போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 5 பேரின் உடல்களிலும் காயங்கள் இருந்தன. எனவே மர்மநபர்கள் பயங்கர ஆயுதங்களை வைத்து அவர்களை அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இறந்தவர்களில் ஒருவரின் கால்கள் பெட்ஷீட்டால் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் கதவு பூட்டப்பட்டுள்ளது.

    எனவே கொலையாளிகள் குடும்பத்தினருக்கு தெரிந்தவர்களாக இருக்கலாம் என கருதுகிறோம். பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

    • கடந்த 6-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார்.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள மங்கைமடம் நெருஞ்சி கொல்லை தெருவை சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது 60). இவர் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் ரசாயன தலைமை என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் இவர் கடந்த 6-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். பின்னர், அனைவரும் நேற்று சொந்த ஊர் திரும்பி உள்ளனர். அப்போது அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் 150 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதனை கண்ட செல்வேந்திரன் மிகுந்த வேதனை அடைந்தார்.

    பின்னர், உடனடியாக இதுகுறித்து செல்வேந்திரன் திருவெண்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, விரைந்து வந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் (பொ) விஜயா மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மறுநாள் அதிகாலை வேளையில் ஒரு வீடியோ பதிவை உறவினர்களுக்கு அனுப்பினர்.
    • எங்களை ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யுங்கள் என்று உருக்கமாக கூறி இருந்தனர்.

    நாக்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மார்ட்டின் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெரில் என்ற டோனி ஆஸ்கார்(வயது56). இவரது மனைவி அன்னி(45). ஜெரில் பிரபல ஓட்டல்களில் சமையல்காரராக வேலை செய்தவர். கொரோனாவுக்கு பிறகு வேலைக்கு செல்லவில்லை.

    இந்த தம்பதிக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. ஆனாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் பாசத்துடன் வாழ்ந்து வந்தனர்.

    சம்பவத்தன்று இரவு தங்களது 26-வது திருமண நாளை வெகுவிமரிசையாக கொண்டாடினர். உறவினர்கள், நண்பர்களை அழைத்து விருந்து வைத்தனர். மறுநாள் அதிகாலை வேளையில் ஒரு வீடியோ பதிவை உறவினர்களுக்கு அனுப்பினர். அதில் "நாங்கள் இந்த உலகத்தை விட்டு செல்கிறோம்" என்று கூறியிருந்தனர்.

    இதைப்பார்த்த உறவுக்கார பெண் ஒருவர் பதறினார். அவர் உடனே மற்ற உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் ஜெரில் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது படுக்கையில் மணக்கோலத்தில் அன்னி பேச்சுமூச்சு இன்றி கிடந்தார். சமையல் அறையில் ஜெரில் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

    முதலில் அன்னி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை தூக்கு கயிற்றில் இருந்து இறக்கிய ஜெரில், தனது மனைவியின் உடலுக்கு திருமணத்தின்போது எடுத்த சேலையை அணிவித்து, பூ, பொட்டு வைத்து மணக்கோலத்தில் அலங்கரித்துள்ளார். பின்னர் ஜெரில் தானும் திருமணத்தின் போது எடுத்த ஆடையை அணிந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

    அவர்கள் உறவினர்களுக்கு அனுப்பிய வீடியோவில் உருக்கமாக பேசி இருந்தது தெரியவந்தது. அதில், "எங்களது சாவுக்கு நாங்களே காரணம். சொத்துகளை உறவினர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களை ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யுங்கள்" என்று உருக்கமாக கூறி இருந்தனர்.

    திருமண நாளை வெகுவிமரிசையாக கொண்டாடிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இந்த தம்பதி ஏற்கனவே திட்டமிட்டு, இந்த விபரீத செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவன்-மனைவி இருவரும் உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்ததும், குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்ததும் தெரியவந்தது. இதுவே அவர்களின் இந்த விபரீத முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த துயரம் குறித்து உறவினர்கள் கூறுகையில், "திருமண நாளை தம்பதியர் கொண்டாடியபோது அவர்கள் அனைவருடன் சகஜமாக பேசினர். நண்பர்கள் விளையாட்டு காட்டியபோது சிரித்து மகிழ்ந்தனர். ஆனால் அடுத்தநாள் அவர்களை பிணமாக பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அனைவருக்கும் பிரியாவிடை கொடுக்கத்தான் திருமண நாளை கொண்டாடி இருப்பதாக கருதுகிறோம்" என்றனர்.

    திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடிவிட்டு துயர முடிவை தேடிக்கொண்ட தம்பதியரால் அந்தப்பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.

    • விஷம் கலப்பதை மண்டபத்தில் இருந்த சிலர் பார்த்துள்ளனர்.
    • தலைமறைவான மகேஷ் பாட்டீல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

    பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் கொள்ளும் மணமக்களை பழிவாங்கும் போக்கு காலம்காலமாக நடைபெற்று வருகிறது. தனது விருப்பத்தை மீறி திருமணம் செய்தால் மகன் அல்லது மகள் என்றும் பாராமல் ஆணவக் கொலை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இருதரப்பினருக்கு இடையே முன்விரோதம் காரணமாக மோதல் என பல்வேறு குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களால் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கு தான் இழப்பு இருக்கும். ஆனால், மகாராஷ்டிராவில் நடந்த நிகழ்வோ இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு உள்ளது.

    தனது விருப்பத்தை மீறி சகோதரி மகள் காதல் திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில் இருந்த தாய் மாமன், திருமண வரவேற்பு நிகழ்வில் தயாரிக்கப்பட்ட உணவில் விஷம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

    தாய்மாமனான மகேஷ் பாட்டீல் எதிர்ப்பை மீறி சகோதரியின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சமைக்கப்பட்ட உணவில் விஷம் கலந்துள்ளார். 

    இவர் விஷம் கலப்பதை மண்டபத்தில் இருந்த சிலர் பார்த்துள்ளனர். இதனால் விஷம் கலந்த உணவை யாரும் சாப்பிடவில்லை. இதையடுத்து மகேஷ் பாட்டீலை அங்கிருந்தவர்கள் பிடிக்க முற்பட்டனர். எனினும், அவர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார். தலைமறைவான மகேஷ் பாட்டீல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

    ×