உள்ளூர் செய்திகள்

ஆட்டோ டிரைவர் சிவமணி

கடலூரில் ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொலை

Published On 2022-10-10 08:32 GMT   |   Update On 2022-10-10 08:32 GMT
  • போலீசார் சவாரிக்கு அழைத்த செல்போன் அழைப்பு குறித்து துப்பு துலக்கினர்.
  • கடைசியாக சிவமணியிடம் செல்போனில் பேசியது ஒரு பெண் என தெரிய வந்தது.

கடலூர்:

கடலூர் அருகே உள்ள குறவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவமணி (வயது 37). ஆட்டோ டிரைவர். அவரது மனைவி சத்யா. இவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு சதீஷ் (2) மகன் உள்ளார்.

நேற்று மாலை சிவமணி வீட்டில் இருந்த போது சவாரிக்கு வரவேண்டும் என்று செல்போன் அழைப்பு வந்தது. இதனை நம்பிய சிவமணி தனது மனைவியிடம் சவாரிக்கு செல்கிறேன் என்று கூறி விட்டு சென்றார்.

அதன்பின்னர் இரவு முழுவதும் சிவமணி வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சத்யா செல்போனை தொடர்பு கொண்ட போது அது ஒலித்து கொண்டே இருந்தது. போனை சிவமணி எடுக்கவில்லை.

பதறி போன சத்யா தனது உறவினர்கள் உதவியுடன் சிவமணியை தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இன்று காலை சிவமணி எஸ்.புதூர்-ராமாபுரம் வாழைத்தோப்பில் சருகில் பிணமாக கிடந்தார். இதனை அந்தவழியாக சென்ற விவசாயிகள், பொது மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிவமணியின் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. அதோடு உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது.

இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போலபரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர்.

இதுபற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்துசென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் சவாரிக்கு அழைத்த செல்போன் அழைப்பு குறித்து துப்பு துலக்கினர். அப்போது கடைசியாக சிவமணியிடம் செல்போனில் பேசியது ஒரு பெண் என தெரிய வந்தது.

உடனே போலீசார் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அந்த பெண்ணின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. அந்த பெண் மாயமாகி விட்டார். அந்த பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். அவரை மடக்கி பிடித்தால் உண்மை நிலவரம் தெரியவரும்.

எனினும் சிவமணி எதற்காக கொலை செய்யபட்டார். அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார், கூலிபடையினரால் சிவமணி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News