உள்ளூர் செய்திகள்

தென்காசி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை-தாய் அடுத்தடுத்து இறந்ததால் பரிதாபம்

Published On 2022-09-13 07:22 GMT   |   Update On 2022-09-13 07:22 GMT
  • கர்ப்பிணி பெண்ணின் குழந்தை இறந்த நிலையில் பிறந்த பொழுதிலும், தாயையும் காப்பாற்ற முடியாமல் அவரும் இறந்தது தட்டாங்குளம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
  • சங்கீதாவுக்கு சரியான சிகிச்சை அளித்து உரிய நேரத்தில் தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தால் தாய்-குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என அவரது உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள தட்டான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பூ இசக்கி.

இவரது மகள் சங்கீதா (வயது 21). இவருக்கும் சுரண்டையை சேர்ந்த சிவா என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சங்கீதா தாய் வீட்டிற்கு சென்றார். பின்னர் சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதற்கிடையே பிரசவத்திற்காக சுந்தரபாண்டியபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சங்கீதா அனுமதிக்கப்பட்டார். திடீரென சங்கீதாவுக்கு ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால் மேல் சிகிச்சைக்காக உடனடியாக தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிகிச்சையால் சங்கீதாவுக்கு சுகப்பிரசவம் மூலம் குழந்தை பிறந்தது.

ஆனால் குழந்தை இறந்து பிறந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சங்கீதா கடுமையான ரத்தப் போக்கால் சோர்வு அடைந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று காலை சங்கீதாவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்ப்பிணி பெண்ணின் குழந்தை இறந்த நிலையில் பிறந்த பொழுதிலும், தாயையும் காப்பாற்ற முடியாமல் அவரும் இறந்தது தட்டாங்குளம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சங்கீதாவிற்கு சுந்தராபாண்டியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சரியான சிகிச்சை அளித்து உரிய நேரத்தில் தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தால் தாய்-குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என அவரது உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News