திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
- பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு உள்ளிட்ட மற்ற பொருட்களையும் சேர்த்து வழங்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை வழங்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தலையில் மண்பானையை சுமந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு உள்ளிட்ட மற்ற பொருட்களையும் சேர்த்து வழங்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் மாவட்ட விவசாய அணி தலைவர் சக்திவேல் மற்றும் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதன் பிறகு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கை மனுவினையும் அளித்தனர்.
இதே போல பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை வழங்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தலையில் மண்பானையை சுமந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் தங்கள் கைகளில் கரும்பு ஏந்தி வந்து ஊர்வலமாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.