திருச்சி அருகே கார் மீது லாரி மோதல்- அரியலூர் பாத்திரக்கடை அதிபர் பலி
- பெற்றோரை பார்த்துவிட்டு மகாராஜன் காரில் அரியலூர் நோக்கி புறப்பட்டு வந்துகொண்டிருந்தார்.
- நள்ளிரவில் கார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தது.
திருச்சி:
நெல்லை மாவட்டம் குட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபணிக்கர் மார்த்தாண்டம் என்பவரது மகன் மகாராஜன் (வயது 40). இவர் அரியலூரில் மளிகைக்கடை மற்றும் பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் மகாராஜன் குட்டத்தில் உள்ள தனது பெற்றோரை பார்த்து வருவதற்காக காரில் சென்றிருந்தார். காரை அரியலூரை சேர்ந்த டிரைவர் செல்வகணேஷ் (35) என்பவர் ஓட்டிச்சென்றார்.
பெற்றோரை பார்த்துவிட்டு மகாராஜன் அதே காரில் அரியலூர் நோக்கி புறப்பட்டு வந்துகொண்டிருந்தார். நள்ளிரவில் அந்த கார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் மின்னல் வேகத்தில் வந்த லாரி, அந்த கார் மீது மோதியது. இதில் கார் பலமுறை உருண்டு கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காருக்குள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மகாராஜன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். டிரைவர் செல்வகணேஷ் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். விபத்து குறித்து தகவல் அறிந்த திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான மகாராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட டிரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.