திருச்சி அருகே விபத்து: கூலித்தொழிலாளி-2 வயது குழந்தை பலி
- விபத்து பற்றிய தகவல் கிடைத்தும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வையம்பட்டி போலீசார் காயம் அடைந்த குழந்தைகளை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- வழியிலேயே தியாகராஜனின் மைத்துனர் மகன் புகழேந்தியும் இறந்தான். குழந்தை அனுஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கீரைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 41). கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இவர் மகள் அனுஸ்ரீ (3) மற்றும் வையம்பட்டி காமாட்சியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் மைத்துனர் மகேஷ் என்பவரது மகன் புகழேந்தி (2) ஆகியோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து இருவரையும் சிகிச்சைக்காக வையம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனது மொபட்டில் இன்று காலை அழைத்து சென்றார். அப்போது ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உள்ள பிரிவு சாலையில் திரும்புவதற்காக தேசிய நெடுச்சாலையில் சென்ற அவர் தனது மொபட்டை நிறுத்தினார். அப்போது கொடைக்கானலில் இருந்து சென்னை நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற சொகுசு கார் மொபட் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மொபட்டில் அமர்ந்திருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் தியாகராஜன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். குழந்தைகளான அனுஸ்ரீ, புகழேந்தி ஆகிய இருவரும் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.
விபத்து பற்றிய தகவல் கிடைத்தும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வையம்பட்டி போலீசார் காயம் அடைந்த குழந்தைகளை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே தியாகராஜனின் மைத்துனர் மகன் புகழேந்தியும் இறந்தான். குழந்தை அனுஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் விபத்தை ஏற்படுத்தியதாக சொகுசு கார் டிரைவரான சென்னை அடையாறு காந்திநகர் பகுதியை சேர்ந்த இக்னேஷியஸ் விவேக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.