உள்ளூர் செய்திகள்

திருட்டு காரில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கொள்ளையர்கள்- இந்தியா முழுவதும் கைவரிசை?

Published On 2022-06-15 07:37 GMT   |   Update On 2022-06-15 07:37 GMT
  • மணிகண்டன் மும்பையில் சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றபோது குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி மும்பை சிறையில் அடைக்கப்பட்டார்.
  • அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார் திருட்டு வழக்கு குற்றவாளியான மனோஜ் திர்கியுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் குடும்பம் இல்லை.

வேலூர்:

வேலூர் அருகே சாலையோரம் நிறுத்தியிருந்த டிப்பர் லாரி திருடிய வழக்கில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் திர்கி (வயது 36) கன்னியாகுமரியைச் சேர்ந்த மணிகண்டன் (52) ஆகியோரை வேலூர் டி.எஸ்.பி.திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்த வழக்கில் 700 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை மற்றும் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பாராட்டினார்.

மணிகண்டன் மும்பையில் சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றபோது குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார் திருட்டு வழக்கு குற்றவாளியான மனோஜ் திர்கியுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் குடும்பம் இல்லை. இதனால் இருவரும் ஒன்று சேர்ந்து வாகன திருட்டில் ஈடுபட திட்டமிட்டனர்.

இருவரும் கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்த நிலையில் மும்பையில் இருந்து ஒரு காரை திருடிக்கொண்டு பெங்களூரு வழியாக வேலூர் வந்தனர்.

அப்போது, செலவுக்கு பணம் வேண்டும் என்பதால் சத்துவாச்சாரியில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியை திருடிச் சென்றதுடன் ஆற்காடு அருகே லாரியின் ஜி.பி.எஸ் கருவியை அகற்றிவிட்டு நம்பர் பிளேட்டையும் மாற்றினர்.

கர்நாடக மாநிலத்தில் பாஸ்டேக் ஸ்டிக்கரை எந்த ஆவணங்கள் இல்லாமல் வாங்க முடியும் என்பதால் முன்கூட்டியே தமிழக பதிவெண் கொண்ட வாகன நம்பருக்கு அவர்கள் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்கியுள்ளனர்.

அந்த பாஸ்டேக் எண்ணை லாரியில் ஒட்டிக்கொண்டு காரைக்கால் வரை சென்றனர். பின்னர் லாரியை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு ரூ.2.50 லட்சத்துக்கு விற்றனர். அந்தப்பணத்தில் லாட்ஜூகளில் அறை எடுத்து தங்கி மது குடித்து விட்டு உல்லாசமாக இருந்தனர். மும்பையில் இருந்து திருடி வந்த காரிலேயே அவர்கள் கொல்கத்தாவுக்கு சென்றனர். செல்லும் வழியில் திருட்டு பணத்தில் உல்லாசமாக பொழுதை கழித்தனர்.

மும்பை காரை கொல்கத்தாவில் விற்றனர். பின்னர் கொல்கத்தாவில் வேறு ஒரு காரை மீண்டும் திருடிக்கொண்டு தமிழகம் வந்தனர். ஓசூரில் தங்கி அடுத்த கட்ட திருட்டுக்கு திட்டம் தீட்டியுள்ளனர். அந்த நேரத்தில் வேலூர் தனிப்படை போலீசார் அவர்களை மடக்கி பிடித்துள்ளனர்.

போலீஸ் விசாரணையில் இருவரும் வாகனங்களை திருடி அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததை தெரிவித்துள்ளனர்.

இருவரையும் போலீசார் வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இவர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News