உள்ளூர் செய்திகள்

அரக்கோணம் சென்ற மின்சார ரெயிலில் சென்னை பெண்ணிடம் செல்போன் பறிப்பு

Published On 2023-07-08 06:12 GMT   |   Update On 2023-07-08 06:12 GMT
  • திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் ஏறிய வாலிபர், ரெயில் பெட்டி வாசல் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார்.
  • பட்டப்பகலில் ஓடும் ரெயிலில் பெண்ணிடமிருந்து செல்போன் பறித்த சம்பவம் பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரக்கோணம்:

சென்னையை சேர்ந்த சகோதரிகள் பிரவீனா மற்றும் அவிதா. இவர்களின் மூத்த சகோதரி அரக்கோணம் அடுத்த திருவலங்காடு பகுதியில் வசித்து வருகிறார்.

அவரது பிறந்தநாள் விழாவுக்கு சகோதரிகள் தனது குழந்தைகளுடன் செல்ல முடிவு செய்தனர்.

சென்னையில் இருந்து பிரவீனா மற்றும் அவிதா ஆகியோர் தங்களது குழந்தைகளுடன் நேற்று காலை அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலில் பயணம் செய்தனர்.

திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் ஏறிய வாலிபர், ரெயில் பெட்டி வாசல் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார்.

அப்போது பிரவீனா செல்போன் மூலம் பேசிக்கொண்டு இருந்ததை வாலிபர் நோட்டமிட்டார். திருவள்ளூர் நிலையத்தில் நின்ற ரெயில் மெதுவாக புறப்பட்டு சென்றது. அப்போது வாலிபர், பிரவீனா கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீனா கூச்சலிட்டார். இருப்பினும் வாலிபரை பிடிக்க முடியவில்லை.

இது குறித்து பிரவீனா ரெயில்வே போலீசில் புகார் கொடுத்துள்ளார். பட்டப்பகலில் ஓடும் ரெயிலில் பெண்ணிடமிருந்து செல்போன் பறித்த சம்பவம் பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓடும் ரெயிலில் அவ்வப்போது பயணிகளிடம் இருந்து செல்போன் பறிக்கும் கும்பல் தொடர்ந்து தங்கள் கைவரிசையை காட்டி வருகிறது.

நடைமேடையில் நடந்து செல்வது போல் சென்று, ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் பயணிகளிடம் நகை மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் கூட, செல்போன் பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடப்பது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுமக்கள் பயணிக்கும் மின்சார ரெயில்களில், பாதுகாப்பை கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பு கட்டாயம் தேவைப்படுகிறது.

பாதுகாப்பு படையினர் ஓடும் ரெயிலில் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News