ரூ.45 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு- அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
- கே.பி.அன்பழகன் மீது 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
- கே.பி.அன்பழகன் அமைச்சராக இருந்த காலங்களில் ரூ.45 கோடி வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் மீது இன்று குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்பு போலீசார் தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், தருமபுரி மாவட்ட செயலாளரும், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் இருந்தார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டபோது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் கடந்த 19-1-2022 தேதி அன்று வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 20-1-2022 தேதி அன்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழனுக்கு சொந்தமான தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த கெரேகோடஅள்ளியில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 53 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடம், சென்னையில் 3 இடங்கள், தெலுங்கானா மாநிலத்தில் ஒரு இடம் என மொத்தம் 58 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.2 கோடியே 87 லட்சத்து, 98 ஆயிரத்து 650 ரொக்கம் மற்றும் தங்க நகைகள் 6.637 கிலோ கிராம், சுமார் 13.85 கிலோ கிராம் வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத 2 கோடியே 65 லட்சத்து 31 ஆயிரத்து, 650 ரூபாய், வங்கி பெட்டக சாவி மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும், கே.பி. அன்பழகன் தனது குடும்பத்தினர் பெயர்களில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும், சொத்துக்குவிப்பு தொடர்பாக கே.பி. அன்பழகனின் மனைவி, 2 மகன்கள், மருமகள் உள்ளிட்டோர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தாக்கல் செய்தனர். அதில் கே.பி.அன்பழகன் அமைச்சராக இருந்த காலங்களில் ரூ.45 கோடி வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று பினாமி பெயரில் அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மகள் வைஷ்னவி, மருமகள்கள், உறவினர்கள் உள்பட 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.