வந்தவாசி அருகே வீடு புகுந்து திருட முயற்சி- பொதுமக்கள் விரட்டியதால் கிணற்றில் குதித்த சென்னை கொள்ளையன்
- நல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த பச்சையப்பன் சேகர் வீட்டில் நகை திருட வந்தது தெரிய வந்தது.
- பச்சையப்பன் மீது சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 45) விவசாயி. ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சேகர் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். கோடை காலம் என்பதால் காற்றுக்காக கதவைத் திறந்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவில் இவர்களது வீட்டிற்குள் வாலிபர் ஒருவர் நைசாக நுழைய முயன்றார். அவரை கண்டதும் வெளியே இருந்த ஆடுகள் கத்தின. சத்தம் கேட்டு சேகர் குடும்பத்தினர் வெளியே வந்தனர். அப்போது பின்பக்கம் வழியாக வாலிபர் உள்ளே புகுந்தார். அவரை கண்டதும் கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அவர்களை கண்டதும் திருட வந்த வாலிபர் தப்பி ஓடினான்.
பொதுமக்கள் அவனை விரட்டி சென்றனர். அப்போது திருடன் அருகில் இருந்த விவசாய கிணற்றில் குதித்தான்.
துரத்திச் சென்ற பொதுமக்கள் கிணற்றில் இருந்த திருடனை மேலே தூக்கினர். மேலும் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்தவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அவர் சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பச்சையப்பன் (வயது 42) என்பது தெரியவந்தது.
நல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த பச்சையப்பன் சேகர் வீட்டில் நகை திருட வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
பச்சையப்பன் மீது சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.