உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவில் நடைபெறும் திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்கும் சென்னை பெண்

Published On 2023-07-03 09:22 GMT   |   Update On 2023-07-03 09:22 GMT
  • திருமதி உலக அழகி போட்டி என்பது திருமணமான பெண்களின் சாதனைகளை உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லும் போட்டியாகும்.
  • 70-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து பல சாதனைகளைச் செய்த பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

திருவொற்றியூர்:

சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி (வயது45). இவர் கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் வருகிற 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடை பெறும் திருமதி உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் அவர் கலந்து கொள்ளஉள்ளார்.

ஏசியா பசிபிக் என்ற பட்டத்தை வென்ற பிளாரன்ஸ் ஹெலன் நளினி திருமதி உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளும் தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இளநிலை பட்டமாக லைப் சயின்ஸ், முதுநிலை பட்டமாக எம்.பி.ஏ. மார்க்கெட்டிங் அண்ட் எச்.ஆர், எம்.எஸ்.சி சைக்காலஜி, எம்.ஏ. ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட படிப்புகள் படித்து உள்ளார்.

இதுதொடர்பாக பிளாரன்ஸ் ஹெலன் நளினி திருவொற்றியூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருமதி உலக அழகி போட்டி என்பது திருமணமான பெண்களின் சாதனைகளை உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லும் போட்டியாகும். இதில் 70-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து பல சாதனைகளைச் செய்த பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

உடற்தகுதிச் சுற்று, தனிநபர் நேர்காணல் சுற்று, ஈவினிங் கவுன் சுற்று என்று மூன்று விதமாக நடைபெறும். உடற் தகுதிச் சுற்று, உடல் பராமரிப்பு, தன்னம்பிக்கை, மனதிடம் ஆகிய சுற்றுகளை வைத்து தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு 25 சதவீத மதிப்பெண்கள் உண்டு. அடுத்ததாக தனிநபர் நேர்காணல் சுற்று நடக்கும். இதில் 5 நடுவர்கள் இருப்பர். 5 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 5 நிமிடங்களுக்குள் நாம் பதில் சொல்ல வேண்டும்.

இதற்கு 50 சதவீத மதிப்பெண்கள் உண்டு. அடுத்ததாக ஈவினிங் கவுன் சுற்று எனப்படும் ஆடை அலங்காரச் சுற்று. இதில் பெண்கள் தங்களுடைய கணவருடன் பங்கேற்க வேண்டும். இது ஒரு கணவன் பெண்களுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதை காட்டும் சுற்று ஆகும்.

மேற்படி சுற்றுக்களில் இருந்து 16 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் 16 பேரும் சமூக பிரச்சனைகள் குறித்த கருத்துக்களைத் தேர்வு செய்ய வேண்டும். அந்தச் சமூக பிரச்சினைகள் பற்றியும், அதை மாற்றுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும் நாம் 30 நொடிகள் பேச வேண்டும்.

பிறகு அவர்கள் அதில் இருந்து கேள்வி எழுப்புவார்கள். அந்தக் கேள்விகளுக்கு 30 நொடிகளில் நாம் பதில் சொல்ல வேண்டும். நான் குழந்தைகளின் கல்வி மற்றும் கல்வி உரிமை ஆகிய சமூக பிரச்சினைகளை தேர்ந்தெடுத்து பேச உள்ளேன். இந்த சுற்றின் இறுதியில் 5 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு இறுதி போட்டிகள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News