அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நேரில் ஆய்வு செய்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்துறையில் இருந்து சேனடோரியம், சீனாபுரம் வழியாக கிரே நகர் பகுதிக்கு சென்றார்.
- அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் 4-வது பம்பிங் ஸ்டேஷன் அமைந்துள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக நேற்று ஈரோடு மாவட்டத்துக்கு சென்றார். அவருக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுமக்களின் வரவேற்பை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபி செட்டிபாளையத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.
அதனைத்தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் அடுத்த கள்ளிப்பட்டியில் அமைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார்.
பின்னர் கலைஞர் படிப்பகத்தையும் திறந்து வைத்து பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதைத் தொடர்ந்து தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பாக ஒரு லட்சம் மரக்கன்றுகளை மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியை முடித்து கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு ஈரோட்டில் உள்ள காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
முன்னதாக ஈரோட்டுக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொட்டும் மழையிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அத்திகடவு-அவினாசி திட்ட பணிகளை பார்வையிடவும், நலத்திட்ட உதவிகள் வழங்கவும் இன்று காலை பெருந்துறை பகுதிக்கு புறப்பட்டார். முதல்-அமைச்சரை வரவேற்று வழி நெடுகிலும் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. சாலையின் இருபுறமும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று முதல்-அமைச்சரை வரவேற்றனர்.
அவர்களை பார்த்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உற்சாகமாக கை அசைத்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்துறையில் இருந்து சேனடோரியம், சீனாபுரம் வழியாக கிரே நகர் பகுதிக்கு சென்றார். அங்கு அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் 4-வது பம்பிங் ஸ்டேஷன் அமைந்துள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளிடம் திட்டங்கள் குறித்து கேட்டு அறிந்தார். விவசாயிகளையும் சந்தித்து பேசினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பெருந்துறை, சேனடோரியம் பை-பாஸ் ரோடு வழியாக கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை சரளையில் நலத்திட்ட உதவிகள் நடைபெறும் விழா மேடைக்கு சென்றார்.
முதல்-அமைச்சரை பார்த்ததும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகம் மிகுதியால் கரகோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர். அதனால் அந்த இடமே அதிர்ந்தது.
அதன் பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.167.50 கோடி மதிப்பில் 63 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சோலார் பகுதியில் புதிய பஸ்நிலையம் அமைக்கும் பணி, அந்தியூர் அருகே உள்ள தேவர் மலையில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் 3 கூடுதல் வகுப்பறை, பெருந்துறை அருகே உள்ள கைக்கோளப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2 உயர்நிலைப்பள்ளி கட்டும் பணி.
சென்னிமலை ஆரம்ப சுகாதார வளாகத்தில் சித்தா கட்டிடம் கட்டும் பணி, சத்தியமங்கலம் தாலுகாவில் அரசு அண்ணா மருத்துவமனை, கொமாரபாளையத்தில் சித்தா கட்டிடம் கட்டும் பணி, எழு மாத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இந்திய சித்த மருத்துவ சேவை, யோகா மருத்துவத்துக்கான கூடுதல் கட்டிடம் கட்டும் பணி உள்பட ரூ.183.70 கோடி மதிப்பில் 1,761 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதேபோல் ஈரோட்டில் கட்டப்பட்டு உள்ள அப்துல்கனி ஜவுளி வணிக வளாகம், ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் கட்டப்பட்டு உள்ள புதிய வணிக வளாகம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிகவியல் பூங்கா.
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் குடிநீர் வினியோக முறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட ரூ.261.57 கோடி மதிப்பில் முடிவுற்ற 135 பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் விழா சிறப்புரையாற்றினார்.
ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 2,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் நிகழ்ச்சியை முடித்து கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் கோவை செல்கிறார். பின்னர் மாலையில் தனியார் கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் இரவு 8.35 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்.