உள்ளூர் செய்திகள்

மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்- ஒரு கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை நேரில் வழங்குகிறார் மு.க.ஸ்டாலின்

Published On 2022-12-21 10:29 GMT   |   Update On 2022-12-21 10:29 GMT
  • தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தாக்கம் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது.
  • கடந்த ஏழு, எட்டு மாதங்களாக உயிரிழப்புகளும் இல்லாத நிலை தான் உள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 2021 ஆகஸ்ட் 5-ந்தேதி மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதல் நபருக்கு மருத்துவ பெட்டகம் வழங்கி அத்திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்தி ஒரு கோடி பயனாளிகளை கண்டறிந்து திட்டத்தை செயலாக்கம் செய்ய வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அதன்படி தற்போது இந்த திட்டம் கடந்த ஓராண்டில் படிப்படியாக வளர்ந்து ஒரு கோடியாவது பயனாளி என்ற இலக்கை தொட்டு இருக்கிறது. அந்த ஒரு கோடியாவது பயனாளி திருச்சி அருகே உள்ள சன்னாசிப்பட்டியில் கண்டறியப்பட்டு உள்ளார். அவருக்கு திருச்சி வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மருந்து பெட்டகத்தை வழங்க உள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அதே பகுதியில் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பிசியோதெரபி சிகிச்சை பெற்று வரும் நபரையும் பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு திட்டப்பணிகளை அவர் தொடங்கிவைக்கிறார்.

இதில் கன்னியாகுமரி, விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவ கட்டிடங்களையும், தாம்பரம் நெஞ்சக மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ரூ.2.50 கோடி மதிப்பிலான சி.டி.ஸ்கேன் எந்திரத்தையும் இயக்கி வைக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சன்னாசிப்பட்டி நிகழ்ச்சியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றி வரும் தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு உயர் ரத்த அழுத்தத்தை கண்டறியும் எந்திரங்கள் வழங்கும் திட்டத்தையும் 10 பேருக்கு வழங்கி தொடங்கி வைக்கிறார்.

மேலும், இந்த இடைநிலை சுகாதார செவிலியர்கள், தன்னார்வலர்கள், சுகாதார பணியாளர்கள் 20 ஆயிரம் பேருக்கு அவர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, டீம் இன்சென்ட்டிவ் (குழு ஊக்கத்தொகை) வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கு ஏற்கனவே இந்த நிதியாண்டில் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்த திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு பயனாளியும் ரூ.500 முதல் ரூ.1000 வரை தனித்தனியாக ஊக்கத்தொகை பெற உள்ளார்கள். இந்த சன்னாசிப்பட்டி நிகழ்ச்சி பிற்பகல் 2 மணியளவில் நடக்கிறது.

சீனா, பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் உருமாறுதல் பெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தாக்கம் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. கடந்த ஏழு, எட்டு மாதங்களாக உயிரிழப்புகளும் இல்லாத நிலை தான் உள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா கட்டுக்குள் வந்ததற்கு தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றியதுதான் காரணம். தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசியை 96 சதவீதம் பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். அதனால் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.

கொரோனா மரபணு சோதனை மேற்கொள்ள ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதற்கான பிரத்யேக ஆய்வகம் சென்னையில் ரூ.4 கோடி செலவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தொடர்ந்து கொரோனா மரபணு மாற்றத்தை கண்காணித்து வருகிறோம்.

சீர்காழியைச் சேர்ந்த 13 வயது மாணவி அபிநயா அரிய வகை தோல் அழுகல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து அபிநயா முதல்வருக்கு கோரிக்கை வைத்த வீடியோ வைரலானது. அது எங்கள் கவனத்திற்கு வந்த பின்பு அபிநயாவை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வாத நோய் பிரிவில் அனுமதித்துள்ளோம். சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல் தனிநபர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

பத்திரிக்கை, ஊடகங்கள், சமூக வலைதளங்களில் இதுபோன்று கோரிக்கைகள் வரும் பட்சத்தில் அவை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 2019-ல் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையில் தான் தற்போதும் உள்ளது. இதுதொடர்பாக டி.ஆர்.பாலு எம்.பி. கூட சமீபத்தில் பாராளுமன்றத்தில், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வெறும் காம்பவுண்டு சுவருடன் நிற்கிறது என குரல் கொடுத்தார். அப்போது மத்திய மந்திரி வடிவமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார். நானும், துறை செயலரும் மீண்டும் மத்திய மந்திரியை சந்தித்து கோரிக்கை வைக்க இருக்கிறோம். விரைவாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வேண்டும். கோவையில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகிறோம்.

2024 தேர்தலை மையப்படுத்தி ஒன்றிய அரசு மருத்துவமனையை கட்ட முயற்சித்தாலும் தேர்தலுக்காக செய்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News