உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.10 லட்சம் பறிமுதல்
- பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்து முதன்மை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவின் அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வீரப்பன்சத்திரத்தில் இருந்து பவானி நோக்கி சென்று கொண்டிருந்த ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.10 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து ஓட்டுனரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் இன்று ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணம் நிரப்ப ரூ.67 லட்சம் கொண்டு சென்றதாகவும், அதில் ரூ.64 லட்சம் ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் கொடுத்த ஆவணங்களின்படி ரூ.3 லட்சம் மட்டுமே மீதம் இருக்க வேண்டிய நிலையில் ரூ.10 லட்சம் இருந்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்து முதன்மை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.