இசைப்பள்ளியில் மாதம் ரூ.400 உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை- கலெக்டர் ஆர்த்தி அறிவிப்பு
- தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய ஏழு கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 12 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம் பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்படும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியானது கோட்டைக்கால் கிராமம், (செவித்திறன குறை உடையோருக்கான அரசு உயர் நிலைப்பள்ளி அருகில்) சதாவரம், ஓரிக்கை அஞ்சல் என்கிற முகவரியில் இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய ஏழு கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 12 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம் பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. சேர்க்கை கட்டணமாக முதலாம் ஆண்டிற்கு ரூ.1500, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு கட்டணமாக ரூ.135 மட்டும் செலுத்தப்பட வேண்டும்.
மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகை 16, 17 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி மற்றும் மாதந்தோறும் ரூ.400 அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை அளிக்கப்படுகிறது.
இசைப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரியவும் நாதஸ்வரம், தவில், தேவாரம் பயின்ற மாணவர்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியவும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.