ராசிபுரத்தில் 'லிப்ட்' கேட்ட கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
- மாணவி கதறி அழுதபடி அவ்வழியாக வந்தவர்களிடம் உதவி கேட்டு, பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
- போலீசார் மணிகண்டனை பிடித்து அதிரடி விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
ராசிபுரம்:
கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார்.
மாணவி, நேற்று மதியம் ஆண்டகளூர் கேட் பகுதியில் இருந்து, கல்லூரிக்கு செல்வதற்காக அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரிடம் லிப்ட் கேட்டார். அந்த வாலிபர், மாணவியை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.
சிறிது தூரம் சென்றதும் அந்த வாலிபர், அணைப்பாளையம் புறவழிச்சாலை வழியாக சிங்களாந்தபுரம் கரட்டு பகுதிக்கு மாணவியை கூட்டிச் சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, வாலிபரிடம் கேட்டபோது, மாணவியை மிரட்டி, அடர்ந்த முள்காடு பகுதியில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் மாணவியிடம் இது பற்றி வெளியே சொன்னால் தீர்த்துக்கட்டி விடுவேன் என மிரட்டி விட்டு, மாணவியிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பித்து சென்று விட்டான்.
இதையடுத்து மாணவி கதறி அழுதபடி அவ்வழியாக வந்தவர்களிடம் உதவி கேட்டு, பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக விசாரணையை தொடங்கிய போலீசார், முதலில் மாணவியை மீட்டனர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மாணவியை பலாத்காரம் செய்தது ராசிபுரம் அடுத்த தொப்பம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், மணிகண்டனை பிடித்து அதிரடி விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, டிப்ளமோ படித்துவிட்டு, இவர் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஒன்பதாம் பாலிக்காடு பகுதியில் உள்ள கரும்பு அரவை ஆலையில் ஊழியராக வேலை செய்து வரும், பெண்களிடம் அத்துமீறி நடப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது இளம்பெண் கடத்தல், கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தல் என 366, 376, 394, 6-397 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து ஜெயிலில் அடைப்பதற்காக போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
தொடர்ந்து இன்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார், தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் புகார் பதிவு செய்த 6 மணி நேரத்தில் குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்ததை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
கைதான மணிகண்டன், கடந்த 2016-ம் ஆண்டு திருச்செங்கோடு அருகே உள்ள ராயர்பாளையம் நெடுங்காடு பகுதியை சேர்ந்த பாவாயி (70) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தார். மணிகண்டன் குடிபோதையில் அங்கு செல்வார். இதனால் பாவாயி, மது குடித்து விட்டு வரக்கூடாது என சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டனும், அவரது நண்பரும் அங்கு சென்று விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்த பாவாயியை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.