தீபாவளி போனஸ் கேட்டு மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் போராட்டம் 2-வது நாளாக நீடிப்பு
- திருச்சி மாநகராட்சி வளாகத்திற்கு வெளியே துப்புரவு பணியாளர்கள் தரையில் படுத்து தூங்கினர்.
- பேச்சுவார்த்தைக்கு நிர்வாகிகள் சென்றபோது தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களிடம் பேச ஆரம்பித்தனர்.
திருச்சி:
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் அன்றாடம் சுமார் 400 டன் குப்பைகளை சேகரித்து, அகற்றும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இதில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று மாலை 6 மணி முதல் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு முழுவதும், விடிய விடிய போராட்டம் நீடித்தது.
இதன் காரணமாக திருச்சி மாநகராட்சி வளாகத்திற்கு வெளியே துப்புரவு பணியாளர்கள் தரையில் படுத்து தூங்கினர்.
இந்நிலையில் இன்று காலை தொடர்ந்து போராட்டம் 2-வது நாளாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். பேச்சுவார்த்தைக்கு நிர்வாகிகள் சென்றபோது தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களிடம் பேச ஆரம்பித்தனர். இதை அறிந்த பேச்சுவார்த்தைக்குச் சென்ற நிர்வாகிகள் உடனடியாக மீண்டும் திரும்பி வந்தபோது தனியார் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அதிகாரிகள் துப்புரவு பணியாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.