உள்ளூர் செய்திகள்

தாம்பரம் அருகே ரூ.1 கோடி கடன் தொல்லையால் ஆசிரியை-கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-07-14 08:35 GMT   |   Update On 2023-07-14 08:35 GMT
  • பொன்னுதாஸ் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம் நடத்துவதற்காக வங்கி மற்றும் தனக்கு தெரிந்த நபர்களிடம் சுமார் ரூ.1 கோடி வரை கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது.
  • பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தவர்கள் யார்? யாரேனும் மிரட்டினார்களா? யார் யாரிடம் கடன் பெற்றனர்? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

தாம்பரம்:

தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், கல்யாண சுந்தரம் தெருவை சேர்ந்தவர் பொன்னுதாஸ்(வயது48). திருமுடிவாக்கத்தில் ஏ.கே.ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி ஜான்சி ராணி(45). குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் கல்லூரியிலும் மற்றொருவர் 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். வழக்கம் போல் பள்ளி-கல்லூரிக்கு சென்ற இருவரும் நேற்று மாலை வீடு திரும்பினர்.

அப்போது வீட்டில் உள்ள அறையில் தந்தை பொன்னுதாஸ், தாய் ஜான்சிராணி ஆகியோர் தனித்தனியாக மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பெற்றோரின் உடல்களை பார்த்து மகன்கள் இருவரும் கதறி துடித்தனர்.

இதுகுறித்து சிட்லப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பொன்னுதாஸ், ஜான்சிராணி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லை காரணமாக அவர்கள் தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

பொன்னுதாஸ் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம் நடத்துவதற்காக வங்கி மற்றும் தனக்கு தெரிந்த நபர்களிடம் சுமார் ரூ.1 கோடி வரை கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அவரால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை.

இதனால் பணத்தை கடன் கொடுத்தவர்கள் பொன்னுதாசுக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி அவர் தனது மனைவியிடம் கூறி கவலை அடைந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளனர்.

அவர்களுக்கு பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தவர்கள் யார்? யாரேனும் மிரட்டினார்களா? யார் யாரிடம் கடன் பெற்றனர்? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News